|
பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்பத் |
|
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி |
|
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் |
|
நீங்காத செல்வம் நிறைந்தேல்ஓர் எம்பாவாய். |
இவர் பாடிய நாச்சியார் திருமொழி பக்திச் சுவை நிரம்பிய
பாடல்களின் தொகுதி. திருமாலையே மணந்துகொள்ள உறுதி பூண்டு, ‘மானிடவர்க்கு
என்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று தெய்வக்காதல் கொண்டவர் இவர்.
திருமாலை மணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்டு பாடிய ‘வாரணம் ஆயிரம்’
என்ற பாடல் தென்கலை வைணவர்களின் திருமணத்தின்போது தவறாமல் ஓதப்படுவது.
ஆண்டாளின் பாடல்களுள் திருப்பாவையே மிகப் பலரால்
போற்றிப் பாராயணம் செய்யப்படுவது. தமிழர்மட்டும் அல்லாமல், கன்னட நாட்டாரும்
ஆந்திர நாட்டாரும் தம்தம் மொழியின் எழுத்துக்களில் ஆண்டாளின் பாடல்களைப் படித்து
வழிபாடு செய்தலும் உண்டு. திருப்பாவையைச் சிறப்பித்து எழுதிய பெரியவாச்சான் பிள்ளை,
“ஸம்ஸாரத்திலே உறங்குகிறவர்களை எழுப்பி எம்பெருமான் தானே தன்னைக் காட்டக்
கண்டார்கள் ஆழ்வார்கள். இவள் (ஆண்டாள்) தானே சென்று எம்பெருமானை எழுப்பித் தன்
குறையை அறிவித்தாள். ஆகையாலே அவர்களிலும் இவள் விலக்ஷணை” என்று பெருமை கூறுகிறார்.
“புருஷன், புருஷனைக் கண்டு ஸ்நேகிப்பதிலுங்காட்டிலும் ஸ்திரி புருஷனைக் கண்டு
ஸ்நேகிக்கப் பள்ளமடையாகையாலே, ஆழ்வார்களிற் காட்டில் எம் பெருமான்பக்கல் பரம
பக்தியுடையவளான ஆண்டாள்” என்று சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். ஸ்ரீவைஷ்ணவத்தின்
வளர்ப்புத் தாய் எனப் போற்றப்படும் இராமாநுஜர்க்கு ஆண்டாளின் திருப்பாவையில்
மிகுந்த ஈடுபாடு இருந்தது. அந்த ஈடுபாட்டினால் அவர் ‘திருப்பாவை ஜீயர்’
என்று புகழப்பட்டார்.
தவம் செய்து மனத்தின் மாசு போக்கி ஞானம் பெற்ற
முனிவர்களைவிட; இறைவனிடம் அடைக்கலம் புகுந்த, பக்தி செலுத்திய ஆழ்வார்களின் சிறப்பு
உயர்ந்தது என்பது வைணவர்களின் கொள்கை. ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதி ஓதிப் பெற்ற
ஞான ஒளியைக் கொண்டே வடமொழியில் உள்ள வேதாந்த உட்பொருள்களை உணர முடிந்தது என்று
ஸ்ரீவேங்கடநாதன் என்ற வேதாந்த தேசிகர் கூறியுள்ளார்.
ஆண்டாள் திருப்பாவை பாடும்போது தம்மை மறந்து கண்ணன் வாழ்ந்த
வடமதுரையில் ஆயர்பாடிக்கே போய்விடுகிறார். அவருடைய கற்பனையே உண்மை ஆகிவிடுகிறது.
வடமதுரை ஆயர்பாடியில் உள்ள பெண்களுள் ஒருத்தியாக ஆண்டாள் மாறி விடுகிறார். அந்த
ஆயர்பாடியில் உள்ள ஆய்ச்சியரோடு சேர்ந்து தாமும் நோன்பு நோற்கிறார். அங்குக்
கண்ணனுடைய வீட்டுக்கே சென்று நந்தகோபன், யசோதை, பலதேவன் முதலானவர்களையும் கண்ணனையும்
துயிலெழுப்புகிறார்.
|