| “ஆடை தண்ணீர் சோறு முதலியவற்றை வாரி வழங்கி
அறம் செய்யும் எம் தலைவ நந்தகோபால! எழுந்திரு....என்னைப் போன்ற பெண்களுக்கெல்லாம்
கொழுந்து போன்றவனே! குலவிளக்கே! எம் தலைவி யசோதையே! எழுந்திரு,,,,உலகை அளந்த
திருமாலே! உறங்காமல் எழுந்திரு,,,,பலதேவா! உன் தம்பியாகிய கண்ணனும் நீயும் உறங்காமல்
எழுக” என்று திருப்பாவை அமைகிறது. “நந்தகோபாலனுடைய மருமகளே! நப்பின்னையே
எழுக” என்று கண்ணனின் தேவியையும் எழுப்புவதாகப் பாடல் உள்ளது.
அவர் பாடிய பாடல்களுள் திருப்பாவை தவிர, மற்றவை கற்பனை
என்று கூறாமல், உண்மையுணர்ச்சியைக் கொண்டு எழுந்தவை என்று கூறத்தக்கனவாக உள்ளன.
திருமால் ஊதுவதால், அந்தக் கடவுளின் வாயிதழின் அனுபவம் பெற்ற சங்கை நோக்கி அவர்
பாடிய பாடல் ஒன்று: “வெண்சங்கே! மாதவனுடைய வாயின் சுவையும் நாற்றமும் நீ
அறிவாய்! நான் விருப்பமாகக் கேட்கிறேன், சொல். மாதவனுடைய வாய் கருப்பூர மணம்
கமழுமோ? தாமரைப் பூவின் மணம் கமழுமோ? அவனுடைய அழகிய பவளம் போன்ற வாயிதழ் தித்திப்பாய்
இருக்குமோ? சொல்வாயாக
|
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ |
|
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ |
|
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் |
|
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே. |
திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார் புலமை நிரம்பிய ஆழ்வார். அவர் அரசர்களிடத்திலும்
செல்வாக்குப் பெற்றுச் சமயத் தொண்டு ஆற்றினார். பழைய காதல் இலக்கிய மரபுகளை
ஒட்டி அவர் பாடிய பாடல்கள் பல. சங்க காலத்தில் காதலில் ஏமாற்றம் உற்ற ஒருவன்
தன்னைத் தானே வருத்திக்கொண்டு உயிர்விடத் துணிவதாகப் பாடும் துறை ஒன்று உண்டு.
அது மடல் எனப்படும். பனைமடல்களால் குதிரை வடிவாகச் செய்து அதன்மேல் இருந்து தன்
காதலியின் உருவத்தைத் தீட்டிய படத்தை ஏந்தி ஊர்நடுவே நின்று உண்ணா நோன்பு கிடந்து
அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத்துறை அது. அவ்வாறு தன்னைத் தான் அழித்துக் கொள்ளும்
வழக்கம் ஆண்களுக்கே உரியது என்றும், பெண்களுக்கு அது பொருந்தாது என்றும் மரபு உண்டு.
திருமங்கையாழ்வார் பாடும் தெய்வக்காதல் பற்றிய |