பக்கம் எண்: - 123 -

பாடலில் அவர் தம்மை நாயகியாகவும் திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில், அங்கே பெண்ணே காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால், மடல் ஏறும் முயற்சி பெண்ணுக்கு உரியது ஆகிறது. சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாட்டு அவர் பாடியிருக்கிறார். இரண்டிலும் நாயகி மடல் ஏறும் முயற்சியே உள்ளது. “பெண்கள் மடல் ஏறுவதில்லை என்ற மரபு தென்மொழியாகிய தமிழில் கேட்டது உண்டு. அதை யாம் கொள்ளவில்லை. வடக்கே உள்ள நெறியையே யாம் விரும்பினோம். ஆகையால் பெண்ணாக இருந்தும் மடம் ஊர்வேன்” என்று காதலி கூறுவதாகப் பாடலில் ஆழ்வார் படைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார், மாணிக்கவாசகரைப்போல், நாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் பின்பற்றிப் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். மகளிர் விளையாடும் விளையாட்டில் சாழல் என்பது ஒன்று. தும்பியை அழைத்துப் பெண்கள் பாடுவது ஒரு வகை. குயிலே கூவாய் என்று பாடுவது மற்றொரு வகை. வீட்டில் பல்லி ஒரு திசையில் ஒலித்தால் யாரோ விருந்தினர் வருவார் என்று நம்பும் பழைய நம்பிக்கையை ஒட்டி, “திருமால் வருமாறு ஒலி செய், பல்லியே!” என்று பாடுவது இன்னொரு வகை. இவ்வாறு சாழல் முதலான வகைகளில் நாட்டுப் பாடல் மரபில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

கூவாய் பூங்குயிலே
    குளிர்மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட
    மணிவண்ண னைவரக்
கூவாய் பூங்குயிலே.

இது குயிலை அழைத்துப் பாடும் பாட்டுகளில் ஒன்று.

கொட்டாய் பல்லிக்குட்டி
    குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல்
    மாதவ னைவரக்
கொட்டாய் பல்லிக்குட்டி.

இது பல்லிப் பாடல்களில் ஒன்று.

சங்க இலக்கியத்துள் காணப்படும் காதல் மரபுகளை அமைத்தும் திருமங்கையாழ்வார் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். வண்டு, நாரை முதலியவற்றைத் தூது அனுப்பித் திருமாலின் அன்பை வேண்டச் செய்யும் பாடல்கள் சுவையானவை. “நாரையே! இன்றே நீ சென்று திருமாலுக்கு என் காதலைப்பற்றிச் சொல்லி வருவாயானால், எனக்கு அதைப்போன்ற