|
“நீர் நிறைந்த வயலில் இரை தேடும் பறவையே! என்
நாயகர் ஏழு உலகங்களையும் அருள் கொண்டு காப்பாற்றுகிறார். என் ஒருத்திக்கு அருள்
செய்தல் அவரால் முடியாதா? நீர் நிறைந்த கண்களோடு புலம்பும் எனக்காக ஒரு சொல்
அவரிடம் போயச் சொல்லி உதவமாட்டாயா?”
“என் குற்றங்கள் கோத்து உருவாவதுபோல் பனி
கோத்து வாடைக் காற்று என்னைத் துன்புறுத்துகிறது. என்னுடைய குற்றங்களையே நினைந்து
எனக்கு அருள் செய்யாமல் இருக்கிறார் என்நாயகராகிய திருமால். திருவடிகளின் பெருமைக்கு
இவள் என்ன பிழை செய்தாள் என்று ஒரு வாய்ச்சொல் எனக்காக அவரிடம் போய்ச் சொல்லக்கூடாதா?
அதனால் உனக்கு என்ன பிழை நேரும்? இளங்கிளியே! நான் வளர்த்த கிளி அல்லவா நீ?”
“சின்ன பூவையே! நீ என் பறவை அல்லவா? திருமாலார்க்கு
என்னுடைய தூதாகச் சென்று என் காதல்நோயைச் சொல் என்று பலமுறையும் உன்னைக் கேட்டுக்
கொண்டேன். நீ சொல்லாமலே இருந்துவிட்டாய். அந்த துன்பத்தால் வருந்தி வருந்தி
இப்போது நான் என் அழகையும் நிறத்தையும் இழந்து தளர்ந்துவிட்டேன். இதுவரையில் உனக்கு
உணவு ஊட்டி வளர்த்ததுபோல் இனியும் வளர்க்கக்கூடிய வலிமை எனக்கு இல்லை. ஆகையால்
இனிமேல், நீ உன் வாயில் இனிய உணவை வைத்து ஊட்டவல்லவர்களைத் தேடிக்கொள்.”
நாயகரின் பிரிவாற்றாமையால் வாடி மெலிந்த நாயகி
பறவைகளையும் உயிரில்லாப் பொருள்களையும் நோக்கிப் புலம்புவதாகவும், அவைகளும் நாயகிபோல்
துயரப்படுவதாகவும் நம்மாழ்வார் பாடியுள்ள பாடல்களும் அவ்வாறே பக்திச்சுவையும் இலக்கியச்
சிறப்பும் உள்ளவை ஆகும். “கடற்கரைச் சோலையில் திரியும் நாரையே! உன் தாயும்
தேவருலகமும் உறங்கினாலும் நீ உறங்கவில்லையே! காதல் நோயும் பசலை நிறமும் மிகுந்து,
நீயும் எம்மைப்போல் திருமாலிடம் நெஞ்சம் பறிகொடுத்தாயோ?”
“கூர்மையான வாய் உடைய அன்றிலே! திருமாலால்
சிந்தைகொள்ளப்பட்டு நள்ளிரவிலும் ஓய்வுகொள்ளாமல் கூவுகிறாயே! அவருக்கு ஆளாகிவிட்ட
எம்மைப்போல் நீயும் அவருடைய துளசி மாலையை விரும்பி ஏங்குகிறாயோ?”
“ஒலிக்கும் கடலே! காதலால் சோர்ந்து நீ முழுதும்
கண்ணுறங்காமல், நெஞ்சம் உருகி ஒலிக்கின்றாயே! திருமாலின் திருவடிகளை விரும்பி யாம்
படும் துன்பத்தை நீயும் படுகின்றாயோ?”
“குளிர்ந்து வீசும் வாடைக் காற்றே! கடலையும் மலையையும் வானத்தையும்
துழாவித் திரிந்து நீயும் எம்மைப்போல் இரவும் பகலும் தூங்கவில்லையே! நீயும் திருமாலைக்
காண்பதற்காக ஏங்கி இவ்வாறு ஊழிக்காலமாக உடல் வருந்தினாயோ!”
|