|
“மேகமே! ஊழிக்காலங்களாக உலகத்திற்காக நீர்கொண்டு,
தோழியரையும் எம்மையும்போல, நீராய்ப் பெய்து மெலிந்து விட்டாய். நீயும் திருமாலின்
பெருமையில் ஈடுபட்டு, அவர்மேல் கொண்ட பாசத்தால் துன்பப்பட்டு வாடுகிறாயோ?”
“சந்திரனே! வருந்தி மெலியும் எம்மைப்போல்
நீயும் வானத்தின் இருளைப் போக்குமளவுக்கு ஒளிவீசவும் முடியாமல் மயங்கித் தேம்புகிறாயே.
நீயும் திருமாலின் மெய்போன்ற பொய்ச் சொல்லைக் கேட்டு நம்பி உன் உடம்பின்
அழகை இழந்து வாடிவிட்டாயோ?”
“இருளே! எம் தலைவராகிய நாராயணர்க்கு எம் நெஞ்சத்தை
இழந்துவிட்டோம். எம் ஆற்றாமையைச் சொல்லி அழுகிறோம். இது போதாது என்று நீயும்
நடுவே வந்து வேறொரு வகையில் கொடுமை செய்கிறாய். எத்தனை ஊழிக்காலம் அப்படியே
நீட்டித்திருக்கிறாய்?”
“இருள்போன்ற நிறத்தோடு ஓடும் கழியே! இரவும்
பகலும் மயங்கி உறங்கினாலும் நீ உறங்கவில்லையே! தீருமாலின் அருளை விரும்பிய பெரிய
ஆசையால் நீயும் மிக வருந்தி நொந்து விட்டாயோ?”
“நந்தாவிளக்கே! காதல்நோய் மெலிந்த உயிரை
வாட்ட, நீயும் எம்மைப்போல் நாயகரின் துளசி மாலைபற்றிய ஆசையால் வேகின்றாயோ?”
திருமாலாகிய நாயகரின் பிரிவாற்றாமல் வருந்திப் புலம்பும்
நாயகியின் நிலையைத் தாய் கூறுவதாக அமைந்த பாடல்களும் பக்திச் சுவை நிரம்பிய கவிதைகளாக
உள்ளன.
“மண்ணைத் துழாவி, ‘இது என் வாமனன் ஆகிய
திருமாலின் மண்’ என்கிறாள். வானத்தைப் பார்த்துத் தொழுது, ‘இது அவன்
வாழும் வைகுந்தம்’ என்று கை காட்டுகிறாள். கண்களில் நீர்நிறைய நின்று, ‘என்
நாயகன் இந்தக் கடல் போன்ற நிறம் உடையவன்’ என்கிறாள். இவ்வாறு என் பெண்ணுக்குப்
பெருமயக்கம் செய்த திருமாலுக்கு நான் என்ன செய்வேன்?”
|
மண்ணை இருந்து துழாவி |
|
வாமனன் மண்இது என்னும் |
|
விண்ணைத் தொழுது அவன்மேவு |
|
வைகுந்தம் என்றுகை காட்டும் |
|
கண்ணை உள்நீர் மல்கநின்று |
|
கடல்வண்ணன் என்னும் அன்னேஎன் |
|
பெண்ணைப் பெருமயல் செய்தார்க்கு |
|
என்செய்கேன் பெய்வளை யீரே: |
|