பக்கம் எண்: - 131 -

காதலுக்குப் பின்னணியாக அந்தந்த ஊர்களின் இயற்கைச் சூழல் வருணிக்கப்பட்டிருந்தது மாறி, கடவுளிடம் செலுத்தும் பக்திக்குப் பின்னணியாக அந்தக் கோயில் தலங்களைச் சூழ்ந்த இயற்கையழகைப் பற்றிய வருணனைகள் அமைந்தன. சங்க இலக்கியக் காதல் பாடல்கள் பலவற்றிலும் இயற்கை வருணனைகள் அமைந்தமை போலவே திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருமங்கையாழ்வார் முதலானவர்களின் பக்திப் பாடல்கள் பலவற்றிலும் சிறந்த இயற்கை வருணனைகள் அமைந்தமை காணலாம்.

வேறுபாடு பெரிதாக விளங்கும் இடம் பாடல்களின் வடிவிலேயே ஆகும். சங்கப் பாட்டுகள் கற்றவர்களுக்கு உரியவனவாகப் பாடப்பட்ட இலக்கியம் ஆகும். ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ் எளியதாய் நெகிழ்ந்து அமைந்தது. ஊர்தோறும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் பாடிக் கோயில்களைச் சுற்றிவந்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில் இசைப்பாடல்களாய் அமைந்தன. இவ்வாறு நடைஎளிமையும் இசையினிமையும் கூடினமையால், தமிழ் இலக்கியத்தில் ஒரு மாறுதல் ஏற்பட முடிந்தது.

பக்தி இலக்கியம் இத்தகைய மாறுதலை ஏற்படுத்தச் சிலப்பதிகாரம் வழிவகுத்துச் சென்றது என்று கூறலாம். சங்க இலக்கியத்திற்கும் பக்தி இலக்கியத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது சிலப்பதிகாரக் காப்பியம் என்று சொல்லலாம். மேற்குறித்த இலக்கியப் பண்புகள் யாவும் சிலப்பதிக்காரத்தில் இருப்பதைக் காணலாம். சங்க இலக்கியத்தில் உள்ள உயர்ந்த மனிதரின் காதலும் அந்தக் காப்பியத்தில் உள்ளது; மனிதர் கடவுளிடம் கொள்ளும் தெய்வக் காதலும் உள்ளது (ஆய்ச்சியர் குரவையில் அதனைக் காணலாம்). அரசர்களின் வீரச் செயல்களும் கொடைப் பண்புகளும் புகழப்பட்டுள்ளன; தெய்வங்களின் அற்புத ஆடல்களும் அருட்செயல்களும் போற்றிப் பாடப்பட்டுள்ளன (ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை முதலியன); கற்றறிந்தவர்க்கு உரிய காதல்துறைகள் அமைந்த பாடல்களும் உள்ளன; மக்கள் கூடிப்பாடும் எளிய இசைப் பாடல்களும், சேர்ந்து தெய்வ வழிபாடு செய்யும் இசைப் பாடல்களும் உள்ளன. ஆகவே, தமிழ்ப் பாட்டுகள் நடையில் நெகிழ்ந்து வளர்வதற்கும் மக்களை நெருங்கி வளர்வதற்கும் சிலப்பதிகாரம் வழிவகுத்தது; ஆழ்வார் நாயன்மார் பாடல்கள் அந்த மாறுதலை நிறைவேறச் செய்தன எனலாம்.

மற்றொரு மாறுதலும் இங்குக் கருதத்தக்கது. சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சைன பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. துறவறத்திற்குப் பெருமை ஏற்பட்டது. அதனால் மக்களின் காதல் வாழ்வுக்கும் இல்லறத்திற்கும் இருந்த பெருமை குறையத் தலைப்பட்டது. இந்த உலகில் உள்ள இன்பங்களை வெறுத்து, மறுமையைமட்டும் நாடுவதே கடமை என்ற