|
மனப்பான்மை வலுத்தது. ஆடல்பாடல் ஓவியம் சிற்பம்
முதலிய கலைகளின் மதிப்புக் குன்றியது. இந்த நிலையிலும் சிலப்பதிகாரம் இருவகை நிலைகளையும்
எடுத்துரைத்து இரண்டிற்கும் பாலம்போலவே அமைந்தது. சிலப்பதிகாரத்தில் துறவறம் பெருமையுறக்
கூறப்படுகிறது; இல்லறமும் கற்பும் பெருமை பெறப் பேசப்படுகின்றன. நிலையாமையும் வற்புறுத்தப்படுகிறது;
கலைகளும் போற்றப்படுகின்றன. காப்பியத்தின் முடிவில்மட்டுமே ‘செல்லுந் தேஎத்துக்கு
உறுதுணை தேடுமின்’ என மறுமைக்கு உரிய முயற்சி வலியுறுத்திக் கூறப்படுகிறது. மற்ற
இடங்களில் எல்லாம், இரண்டும் மாறி மாறி விளக்கப்படுகின்றன. ஆழ்வார் நாயன்மார்
பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. நிலையாமை
உணர்த்தப்படுகிறது; கலைகளும் போற்றப்படுகின்றன. இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே
இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது. உலக
வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில்
திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது
திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்திலுள்ள அறிவுரை. சைனத் துறவியாக, துறவிகளின் தலைவராக
இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள
பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும்
இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது:
|
குருகாம் வயிரமாம் கூறு நாளாம் |
|
கொள்ளும் கிழமையாம் கோளே தானாம் |
|
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் |
|
பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம் |
|
ஒருகால் உமையாளோர் பாக னுமாம் |
|
உள்நின்ற நாவிற்கு உரையா டியாம் |
|
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் |
|
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. |
[இளங்குருத்து, முற்றிய வைரம் எல்லாம் ஈசனே. நாள்,
கிழமை, கிரகங்கள் எல்லாம் அவனே. அமிழ்தமும் அவனே. பாலின் நெய், பழத்தின் சாறு,
பாட்டின் இசை எல்லாம் ஈசனே. உமையவளைப் பாகத்தில் கொண்டவன் அவன். நாவிற்குச்
சொல்லும் சக்தி அவன். உலகின் கரு அவன். உலகம் தோன்றுவதற்கு முன்னே தோன்றும்
கண் அவன். அவனே என்னை ஈன்று காக்கும் தந்தை.]
|