பக்கம் எண்: - 133 -

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை முதலிய எல்லாம் கண்ணனாகிய எம்பெருமானே, அவன் அருளால் பெறும் இன்பங்களே என்று கண்ணீர் மல்கி உருக வேண்டும் என்பது நம்மாழ்வாரின் அறிவுரை. இவ்வாறே மற்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாடல்களிலும் இறைவனை நினைந்து உருகும் பக்தியே மேலோங்கி நிற்க, மற்ற விருப்புவெறுப்புகளும் கொள்கைகளும் அச்சங்களும் பின்னிலை அடைகின்றன.

ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று; கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள் கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால், அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ், கடவுளைப் பாடுவதற்குமட்டுமே பயன்படவேண்டும் என்ற கொள்ளை வளர்ந்தது. அரசர்களுடைய அரண்மனைகளையும் செல்வர்களின் மாளிகைகளையும் நாடிச் சென்று ஏங்கி நின்றவர்களைத் திருப்பிக் கோயில்களை நாடி நிற்கச் செய்தார்கள். அரண்மனைக்குப் பெயராக அதுவரையில் வழங்கி வந்த கோயில் என்ற சொல்லே கடவுளின் ஆலயத்துக்கு உரிய சொல்லாகுமாறு மாறுதல் ஏற்பட்டுவிட்டது. நாட்டில் அதுவரையில் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தவை அரண்மனைகளே. பக்திப் பாடல்கள் செய்த புரட்சியின் விளைவாக, அரண்மனைகளுக்கு இருந்த சிறப்பெல்லாம் கோயில்களுக்கு உரியன ஆயின.  அரண்மனைகளைவிட உயர்ந்த கட்டடங்களாகக் கோயில் கோபுரங்கள் ஓங்கி நிற்கும்படியான மாறுதலைச் செய்த பெருமை பக்திப் பாடல்களுக்கே உண்டு. அரண்மனைக்குச் சென்று விடியற்காலையில் அரசன் துயிலெழுமாறு பாடிவந்த இசைப் புலவர்களையும் மற்றவர்களையும் கோயிலை நாடிச் சென்று வைகறையில் துயிலெழுப்பும் பாடல் (திருப்பள்ளியெழுச்சி) பாடும்படியாகச் சமயத் தலைவர்கள் செய்துவிட்டார்கள். அரண்மனையில் இருந்த அரசனும் வைகறையில் எழுந்து கோயிலுக்குச் சென்று மக்களோடு சேர்ந்து திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்துகொள்ளும் படியான நிலைமை ஏற்பட்டது. அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல, கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின. மனிதர்க்குள் இருந்துவந்த உயர்வுதாழ்வுகளும் சாதி வேறுபாடுகளும் ஒருவாறு புறக்கணிக்கப்படுவதற்கும் இந்தத் திருப்பம் பயன்பட்டது எனலாம்.