பக்கம் எண்: - 134 -

7. பலவகை நூல்கள்
(கி. பி. 700 - 1300)

நந்திக் கலம்பகம்

புதிய இலக்கிய வகைகள் சில, இடைக்காலத்தில் தோன்றின. அவற்றுள் கலம்பகம் என்பது ஒன்று. பலவகையான பொருள் பற்றி ஒரே நூலில் பாடுவதை ஒரு புதுமையாகக் கொண்டனர் அக்காலத்தவர். பலவகைப் பொருள்பற்றி வெவ்வேறு செய்யுள் வகைகளால் நூறு பாட்டுகள் அமைந்த நூல் கலம்பகம் எனப்படும். ஒரு செய்யுளின் இறுதித் தொடர் அல்லது சொல் அல்லது சீர் அல்லது அசை அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும் அந்தாதி முறையிலே நூறு செய்யுளும் அமையும். அத்தகைய நூல் கலம்பகம் என்னும் பெயரால் நந்திவர்மன் என்ற பல்லவ அரசனைப் புகழ்ந்து பாடப்பட்டது. நந்திக்கலம்பகம் என்று அதற்குப் பெயர் வழங்கியது. செய்யுள்கள் சுவை மிகுந்து கற்பனை நயம் அமைந்து இலக்கிய விருந்தாக உள்ளன. ஆங்காங்கே உயர்வு நவிற்சி அளவுகடந்து செல்வதாகக் காணப்பட்டபோதிலும், செய்யுளின் நடையும் நயமும் அந்த உயர்வுநவிற்சி ஒரு குறையாகத் தோன்றாதவாறு செய்கின்றன. அந்த நூலின் சிறப்பை விளக்க ஒரு கதை சொல்லப்படுகிறது. வரலாற்று உண்மை அந்தக் கதையில் இல்லையானாலும், நூலின் சிறப்பை விளக்கும் காரணத்தால் அந்தக் கதை நிலவி வருகிறது. அந்தப் பல்லவ அரசனின் பகைவன் அவனை ஒழிப்பதற்குச் சில சூழ்ச்சிகள் செய்தானாம்.  அவைகள் வெல்லாமல் போகவே, கடைசியில் இப்படி ஒரு சுவையான நூல் பாடி, அதில் அவனுடைய மரணத்துக்கு உரிய வகையில் படிப்படியாகச் சில தொடர்களையும் செய்யுள்களையும் அமைத்து, ஈம விறகு அடுக்கி அதன்மேல் அரசன் வீற்றிருந்து கேட்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டான். நந்திவர்மன் என்ற அந்த அரசன் தமிழ்ப் பாட்டுகளின் சுவையில் மிகவும், ஈடுபட்டவன், ஆகையால், அந்த வேண்டுகோளுக்கு இசைந்தான். சூழ்ச்சியைப்பற்றி அறிந்த பிறகும், பாட்டுகளின் சுவையில் திளைத்து ஒன்றுபட்ட அரசனுடைய மனம் அதைவிட்டு எழ இடந் தரவில்லை. இறுதிவரையில் ஈம விறகின்மேலே இருந்து நூறாவது பாட்டையும் கேட்டு அதன் மேலேயே உயிர் துறந்தான் என்றும், உடனே விறகின் அடுக்கு தீப்பற்றி எரிந்தது என்றும் கதை சொல்லும். அந்த நூறாவது பாட்டு கவிதை நயம் அமைந்தது. அது வருமாறு:-