பக்கம் எண்: - 146 -

சிறப்பு தேக்கம் அடைந்தது. பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் உலாவுக்கு இருந்த பெருமை குன்றி, புதிய இலக்கிய வகைகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது.

தூது

அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்கு ஒருவர் வாயிலாகத் தூது சொல்லியனுப்புவது பழங்காலம்முதல் இருந்துவந்த பழக்கம் ஆகும். அதியமான என்ற அரசன் தொண்டைமான் என்பவனுக்கு ஒளவையார் என்ற புலவரைத் தூது அனுப்பிய செய்தி புறநானூற்றுப் பாட்டால் தெரியவருகிறது. போர் முதலான காரணங்களுக்காக அரசர்களிடம் இருந்துவந்த இந்தப் பழக்கம், இலக்கியத்தில் கற்பனையாக அமையும்போது சிலவகை வடிவம் பெற்றது. பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார், அவருடைய உயிர் நண்பன் சோழ நாட்டு அரசன் கோப்பெருஞ் சோழன். சோழனைப் பாராட்டிப் பாடவேண்டும் என்று விரும்பிய புலவர், வடக்கே சோழநாட்டை நோக்கிப் பறந்த ஓர் அன்னத்தை நோக்கி, “அன்னமே! நீ சோழநாட்டை நோக்கிப் பறக்கின்றாய். அங்கே சோழனுடைய அரண்மனை காணப்படும்போது, நீ இறங்கி உள்ளேசென்று சோழனிடம் என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள். உனக்கு வேண்டியதை எல்லாம் - உன் துணையாகிய பெண் அன்னம் அணிவதற்கு உரியவை எல்லாம் - அரசன் உனக்குத் தருவான்” என்று கூறுவதாகக் கற்பனை செய்து பாடியுள்ளார். இவ்வாறு பேசாத பறவை விலங்குகளையும், உயிர் இல்லாத மேகம், காற்று முதலியவற்றையும் தூது அனுப்புவதாகக் கற்பனை செய்து பாடுவது காதல் பாட்டுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியமாகிய சங்கப் பாடல்களிலேயே இத்தகைய காதல் தூது அமைந்த பாட்டுகள் சில உள்ளன. கடற்கரையில் காதலனைக் காணாது வருந்தும் காதலி ஒருத்தி அங்கே விரைந்து ஓடும் நண்டைப் பார்த்து, “நண்டே! என் காதலர் அதோ அந்த ஊரில் உள்ளார். அவரிடம் சென்று என் துயர நிலையைச் சொல்ல வேண்டும். இந்தக் கடற்கரைச் சோலையும் அதற்கு உதவவில்லை; இந்த உப்பங்கழியும் அந்த வழியே பாய்கிறபோதிலும் அவரைக் கண்டு சொல்லாது. நீ தான் அவரிடம் சென்று என் நிலையைச் சொல்ல வேண்டும்” என்று கூறுவதாக அகநானூற்றில் ஒரு பாட்டு உள்ளது. இவ்வாறு காதல் துறையில் அமைந்த பாட்டுகளை ஒட்டிப் பிற்காலத்துப் பக்தி இலக்கியத்திலும், கடவுளிடம் தூது அனுப்பும் முறையில் ஆழ்வார் நாயன்மார்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர். தேவாரத்திலும் திருவாசகத்திலும் நாலாயிரத்திலும் உள்ள அந்தத் தூதுப் பாடல்கள் பக்திச்சுவை நிரம்பி