பக்கம் எண்: - 147 -

உருக்கமாக அமைந்துள்ளன. குயில், அன்றில், புறா, வண்டு, கிளி, நாரை முதலிய பறவைகள் பக்தர்களின் தூதுபற்றிய கற்பனைக்குப் பயன்பட்டுள்ளன. நாயகிநாயகக் காதலைப் பக்திப் பாடல்களுக்கு உரிய வடிவில் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூது என்னும் வகையை நன்கு பயன்படுத்தி நெஞ்சை உருக்கும் பாடல்கள் பலவற்றை அளித்திருக்கிறார்கள்.

பெரிய காவியங்களிலும் காதலர்கள் தூது அனுப்புவதாகப் பாடும் பகுதிகள் உள்ளன. உமாபதி சிவாச்சாரியார் என்னும் சைவ சமயத்துச் சான்றோர் தம் நெஞ்சையே தூது அனுப்புவதாகப் பாடியது தனி நூலாகவே அமைந்துவிட்டது. அதற்குப் பிறகு தூது என்ற பெயரால் விரிவான நூல்கள் இயற்றுவது வழக்கமாகி விட்டது. தூது ஒருவகை இலக்கியமாக வளர்ந்துவிட்டது.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் (15-ஆம் நூற்றாண்டினர்) இயற்றிய அழகர் கிள்ளைவிடு தூது, தூது என்னும் வகையான நூல்களுள் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிளியைக் கடவுளிடம் தூது அனுப்பும் காதலி, அந்தக் கிளிக்கு உள்ள தகுதிகளை எடுத்துச் சொல்லும் முறையும் மற்ற வருணனைகளும் மிக நயமாக அமைந்துள்ளன. அதன் நடை இனிமை வாய்ந்தது.

தூதாக அனுப்புவதற்குக் கற்பனை செய்யப்படும் பொருள்களும் வெவ்வேறாகப் பெருகிவிட்டன. பணம், நெல், துகில், புகையிலை, மான், காக்கை, தமிழ் முதலியவற்றைத் தூது அனுப்புவதாகப் புலவர் பலர் கற்பனைகள் செய்து நூல்கள் இயற்றியுள்ளனர். பணத்தைத் தூதாக அனுப்பும் நூலில், பணம் தவிர மற்றவை தூது செல்லும் தகுதி குறைந்தவை என்பதையும் பணமே தன் கருத்தை நிறைவேற்றித் தரும் ஆற்றல் உடையது என்பதையும் புலவர் நயமாகப் பணத்துக்கு எடுத்துரைத்து வேண்டிக்கொள்வதாகக் கற்பனை செய்து கூறப்படுகிறது. அவ்வாறே ஒவ்வொரு பொருளையும் அதற்கு உரிய சிறப்புகளையும் மற்றவற்றிற்கு இல்லாத ஆற்றலையும் எடுத்துக் கூறிக் கற்பனை செய்வதால், ஒவ்வொரு தூது நூலும் ஒவ்வொரு வகையில் அழகாக அமையும். நாட்டுக்குப் புதிதாக வந்தது புகையிலை. அதைத் தூது அனுப்புவதாகப் புலவர் ஒருவர் கற்பனை செய்தார். மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபெருமானிடம் தமிழ் மொழியையே தூது அனுப்புவதாகப் புலவர் ஒருவர் பாடிய நூல் தமிழ்விடுதூது என்பது. அந்த நூலில், தூது செல்லுமாறு தமிழ் மொழியை வேண்டிக்கொள்ளும் காதலி (பக்தர்), தமிழுக்கு உள்ள சிறப்பியல்புகளை எல்லாம் எடுத்துக்கூறி, “நீயே என் கருத்தை முற்றுவிக்கும் தகுதி பெற்றிருக்கிறாய். நீதான் என் குறையைத் தக்கவாறு தலைவனிடம் எடுத்துரைக்க முடியும்” என்று சொல்லுமிடத்தில், தமிழ்மொழியின் இலக்கிய