பக்கம் எண்: - 152 -

இந்த நூலின் உரை மற்றொரு வகையிலும் முக்கியமானதாக உள்ளது.  தமிழில் பழைய உரைநடையில் வரலாற்றை ஆராய்கின்றவர்கள், சிலப்பதிகாரத்தில் இடையிடையே வரும் உரைநடைப்பகுதிகளைக் காட்டுவர். அவைகளே மிகப் பழைய உரைநடைப் பகுதிகளாக உள்ளன.  அடுத்தபடியாக, பழைய உரைநடையாக நமக்குக் கிட்டுவது இந்த களவியல் உரையாகும்.  உரைநடையாக எழுதப்பட்டபோதிலும், செய்யுள்போலவே சீர்களின் அமைப்பும் எதுகைமோனை அடுக்கும் சொற்களின் செறிவும் அடைகளும் கொண்டு புலவர்கள் கையாண்ட செறிவான உரைநடைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது அது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குமுன் புலவர்கள் விரும்பி எழுதிய தமிழ்நடையை அறிய விரும்புவார்க்கு அந்த ஒரு நூலே சான்றாக உதவுகிறது.

அகப்பொருள்பற்றிக் களவியல் இயற்றப்பட்டது போல், வீரம்பற்றிப் புறப்பொருள் குறித்து ஒரு புது நூல் ஒன்பதாம் நூற்றாண்டில் ஐயனாரிதனார் என்பவரால் இயற்றப்பட்டது. அது புறப்பொருள் வெண்பாமாலை எனப்படும். சில சூத்திரங்களும் அவற்றிற்கு இலக்கியமான வெண்பாக்கள் பலவும் கொண்ட நூல் அது. இலக்கணநூலாக இருந்தபோதிலும், அதில் உள்ள வெண்பாக்கள் சிறந்த இலக்கியச்செல்வமாக விளங்குகின்றன. அந்தச் செய்யுள்களின் நடை உயிரோட்டம் உள்ளது. கற்பனை நயம் உள்ள பாக்கள் கற்பவர்க்கு விருந்தாக உள்ளன. பிற்காலத்து வெண்பாக்கள்போல் சொற்கள் எளியனவாக இல்லாமல், சங்க இலக்கியம் போல் செறிவு உடையனவாக இருக்கின்றன. ஆயினும் சுவையான முறையில் கருத்துகளை விளக்குவதால், கற்றவர் போற்றத்தக்கனவாக உள்ளன. வெண்பாவால் அமைந்த பழைய நூல்களுள் நாலடியார்க்கும் பழமொழி நானூற்றுக்கும் நிகரான சிறப்பு உடையது அந்த நூல் ஆகும்.

 சைனரும் பௌத்தரும் சைவ வைணவரோடு போட்டியிட்டுத் தம்தம் சமயக்கொள்கைகளைப் பரப்புவதற்காக இயற்றிய காப்பியங்களும் புராணங்களும் சில. அவை பெருங்கதை, மேருமந்தரபுராணம், சாந்தி புராணம், ஸ்ரீபுராணம், சிந்தாமணி, சூடாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி முதலியன. இவற்றுள் சில, காப்பியத்துக்கு உரிய உறுப்புகள் எல்லாம் நிரம்பிக் கவிச்சுவை உடையனவாய் இலக்கிய உலகில் புகழ்பெற்றுவிட்டன. சில சமய வாதங்களும் பிரசாரங்களும் மிகுந்து இலக்கிய நயம் குறைந்தமையால் பிற்காலத்தார் போற்றாமல் விட்டனர். காலப்போக்கில் அவை மெல்ல மெல்ல மறைந்து போயின.