பக்கம் எண்: - 151 -

நூலை இயற்றியவன். பல்லவர்கள் வடமொழியில் நூல்கள் பல இயற்றப்படுவதற்கு ஊக்கம் அளித்தார்கள்.  காஞ்சிபுரம் பலவகைக் கலைகளின் வளர்ச்சிக்கும் தலைமை தாங்கிவந்த காலம் அது. நாலந்தா பல்கலைக் கழகத்திற்குத் தருமபாலர், திந்நாகர் முதலிய தமிழறிஞர்களைப் பேராசிரியர்களாகக் காஞ்சிபுரம் அனுப்பிவந்த காலம் அது. வடமொழிக் காவியாதர்ச நூலின் ஆசிரியர் தண்டி முதலானோர் வாழ்ந்து வடமொழி நூல்கள் பல ஆக்கினார்கள்.  மாமல்லபுரத்தில் உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் செதுக்கப்பட்ட காலமும் அதுவே. காஞ்சிபுரம் ஒரு பெரிய பல்கலைக்கழகமாக விளங்கியது.  வடமொழிப் புலவர்களும் தமிழ்ப் புலவர்களும் பற்பலர் வாழ்ந்து அங்கே இலக்கிய இலக்கணத் தொண்டுகள் புரிந்துவந்தனர். சைனர்களும் பௌத்தர்களும் சமயத்துறையில் பெற்றிருந்த தலைமையும் சிறப்பும் குறைந்த பிறகு, இலக்கிய இலக்கணத் துறைகளில் தங்கள் புலமையால் தொண்டு செய்து தம்தம் பெருமைகளைக் காத்துக்கொண்டார்கள். அந்தத் துறைகளில் அவர்கள் இயற்றிய நூல்களில் சில மறைந்துவிட்டபோதிலும், சில இன்னும் பயனுள்ளனவாக விளங்கி வருகின்றன.

தமிழில் பாடப்படும் காதல் துறைகள்பற்றி இப்போது கிடைக்கும் பழைய இலக்கணம் தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகும். அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது.  அதற்கு அடுத்தபடியாக இயற்றப்பட்ட நூல்கள் சில மறைந்தன.  உள்ள நூல்களுள் ஒன்று களவியல் என்பது.  அது கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று கூறப்படுகிறது. காதல் துறைகளுள் திருமணத்திற்கு முற்பட்ட வாழ்க்கைப் பகுதிகளைப்பற்றிமட்டும் கூறுவதால் அது களவியல் எனப் பெயர் பெற்றது (களவு என்பது பெற்றோரும் ஊராரும் அறியாத மறைமுகமான காதல்). அறுபது சூத்திரங்கள் அடங்கிய அந்த இலக்கண நூலை இயற்றியவர் இறையனார் என்ற புலவர். அந்த நூலைவிட அதற்கு அமைந்துள்ள பழைய உரையே இக்காலத்தில் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. அந்த உரையை எழுதியவர் நக்கீரர் என்று குறிப்பிடப்படுகிறார். அவருடைய உரையில் கற்பனையுடன் கலந்த இலக்கிய வரலாற்றுச் செய்திகள் பல உள்ளன. அதில் சங்க காலத்துப் புலவர் பலருடைய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. முதல் தமிழ் இலக்கண நூலை அகத்தியர் இயற்றினார் என்ற குறிப்பும், மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன என்ற குறிப்பும் உள்ளன.  அந்தச் சங்கங்களைப்பற்றி முதல் முதலாக அறிவிக்கும் நூல் அதுவே. இலக்கிய நூல்கள், இசைநூல்கள், நாடகநூல்கள் பலவற்றின் பெயர்கள் அந்த உரையால் அறியப்படுகின்றன.  அவற்றுள் பல இப்போது கிடைக்காதவை.  சில, பழைய உரை நூல்களில் சுட்டப்படுகின்றன; சிற்சில செய்யுள்களும் சூத்திரங்களும் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன.