பக்கம் எண்: - 150 -

நூல் முற்றிலும் மறைந்தது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் சுவையான முறையில் சந்தம் நிறைந்த மிடுக்கான நடையில் பாரதம் இயற்றிய பிறகு பழைய பாரத நூல்களைப்பற்றி நினைப்பவரும் இல்லாமற் போயினர்.

இராமாயண நூல்கள்

      பெருந்தேவனாரின் பழைய பாரதம் போலவே, அகவல் என்னும் செய்யுளால் இயற்றப்பட்ட பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்தது.  ஐந்து செய்யுள்கள்மட்டுமே இப்போது கிடைக்கின்றன. சைனர்களால் போற்றப்பட்ட சைன இராமாயணம் ஒன்று இருந்தது. அந்த நூலிலும் சில செய்யுள்களே இப்போது கிடைக்கின்றன. பிற்காலத்துப் புலவர்கள் தாம் தொகுத்த நூலிலும் இயற்றிய நூலிலும் சிலவற்றைச் சேர்த்து வைத்த காரணத்தால், அந்தச் சில செய்யுள்கள்மட்டும் இப்போது கிடைக்கின்றன.  கம்பர் இராமாயணம் இயற்றிய பிறகு, அதன் ஒப்பற்ற சிறப்புக்கு முன் நிற்க முடியாமல் அந்தப் பழைய இராமாயண நூல்கள் மறைந்துபோயின. ஒரு பொருளைப்பற்றிச் சிறந்த நூல் ஒன்று எழுந்தபிறகு, அதற்குமுன் அந்தப் பொருள்பற்றிய சிறப்புக் குறைந்த நூல்களைப் போற்றாமல் விட்டுவிடும் வழக்கம் உண்டு என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

மற்ற நூல்கள்

வைணவர்கள் இராமாயண பாரதக் கதைகளை நாட்டில் பரப்பியதுபோலவே, சைவர்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பற்றி மக்களிடையே எடுத்துரைத்து வந்தனர்.  அவ்வகையில் தமிழில் முதல்முதல் எழுந்த நூல் கல்லாடம் என்பது. அதன் ஆசிரியர் கல்லாடர் என்பவர்.  சங்க இலக்கிய நடையையே பின்பற்றி அகவல் என்னும் யாப்பு வகையால், நூறு செய்யுள்கள் உடைய நூலை இயற்றினார்.  ஒவ்வொரு செய்யுளும் மதுரையில் உள்ள சிவபெருமானின் திருவிளையாடலை எடுத்துரைப்பது; காதல்துறை அமைந்தது.  பிற்காலத்துத் திருவிளையாடற் புராணங்கள் சில தோன்றுவதற்கு இது அடிப்படையாக அமைந்தது. இவ்வாறே வைணவ புராணங்களும் சைன புராணங்களும் தோன்றுவதற்கும் வடமொழி நூல்களின் தொடர்பு மிகுவதற்கும் இத்தகைய நூல்கள் வழிவகுத்தன.  வடமொழி நூல்களைத் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றுவது இந்தக் காலத்தில் தொடக்கம் பெற்றது. அப்போது பல்லவ அரசர்கள் தமிழ் நாட்டில் பெரும்பகுதியை ஆண்டுவந்தார்கள். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அவர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது.  அவர்கள், தமிழ் வடமொழி ஆகிய இருமொழிப் புலமையையும் போற்றினார்கள்.  மகேந்திரன் என்ற பல்லவ அரசன் மத்தவிலாசப் பிரகசனம் என்ற வடமொழி