|
பெயரால் தொகுக்கப்பட்டன. நாயன்மார்களின்
தேவாரத்திற்கு அடுத்தபடியாக உருக்கமான பக்திச் சுவை நிரம்பிய பாடல்களாக அவை போற்றப்பட்டன.
தஞ்சாவூரில் இராசராசசோழன் எழுப்பிய பெரிய கோயிலின் சிவபெருமான்மீதும், கங்கைகொண்ட
சோழபுரத்துக் கோயிலின் கடவுள்மீதும் கருவூர்த்தேவர் பாடிய பாடல்கள் பக்தர்களின்
நெஞ்சை உருக்குவன. திருவிசைப்பா என்ற பெயரே இவற்றின் இசைபற்றிய சிறப்பை விளக்குவதாகும்.
திருவிசைப்பாவின் பாடல்களும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு என்னும் பாடல்களும்
இன்னும் கோயில்களில் வழிபாட்டுக்கு உரியனவாக இசையோடு பாடப்படுகின்றன. திருவிசைப்பாவில்
இப்போது உள்ள பாடல்கள் 301.
சைவ சமயத்தைச் சார்ந்த பக்தி
இலக்கியம் பன்னிரண்டு திருமுறைகளாகப் பாகுபாடு செய்து அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர்
தேவாரம் நாலாயிரம் முதல் மூன்று திருமுறை. திருநாவுக்கரசர் தேவாரம் மூவாயிரமும் அடுத்த
மூன்று திருமுறை. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரம் ஆயிரம் ஏழாம் திருமுறை. மாணிக்கவாசகரின்
திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை. மேலே குறித்த திருவிசைப்பாவும்
திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை. திருமூலரின் திருமந்திரம் என்னும் நூல் பத்தாம்
திருமுறை. நக்கீரதேவ நாயனார், பட்டினத்தார் முதலான சைவ சமயச் சான்றோர்களின்
நூல்கள் பதினொன்றாம் திருமுறை. சேக்கிழாரின் காப்பியமாகிய பெரிய புராணம் பன்னிரண்டாம்
திருமுறை.
பெரிய புராணம்
தழுவலும் மொழிபெயர்ப்புமாக இல்லாமல்
தமிழ்நாட்டுக்கு உரியதாகவே இடைக்காலத்தில் எழுந்த காப்பியம் பெரியபுராணம் என்பது.
சேக்கிழார் என்பவரால் இயற்றப்பட்டது. அவர் சோழ அரசன் குலோத்துங்கனிடம் (கி.
பி. 11, 12 - ஆம் நூற்றாண்டில்) அமைச்சராக இருந்து, பிறகு சைவ சமயத் தொண்டுக்காகவே
தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்திநாயனார்
அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு வணக்கமாகத் திருத்தொண்டத்தொகை என்பதைப் பதினொரு
பாடல்களால் பாடினார். பிறகு வந்த நம்பியாண்டார் நம்பி என்பவர் அந்த நாயன்மார்களின்
வாழ்க்கைபற்றிய குறிப்புகளைமட்டும் அமைத்துத் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும்
சிறுநூல் இயற்றினார். சேக்கிழார் அந்தக் குறிப்புகளை விரிவுபடுத்தி நாலாயிரத்துக்கு
மேற்பட்ட செய்யுள்களால் காப்பியம் இயற்றினார். அந்த விரிவுக்காக - காப்பியமாக
|