பக்கம் எண்: - 161 -

விரிவுபடுத்துவதற்காக - அவர் மேற்கொண்ட முயற்சியும் உழைப்பும் எவ்வளவு அருமையானவை! அமைச்சராக இருந்த செல்வாக்கு முழுவதும் பயன்படுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றி அங்கங்கே நாயன்மார் வாழ்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று அவ்விடங்களில் செவிமரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளை விடாமல் தொகுத்து அவற்றைக்கொண்டு அறுபத்துமூவருடைய வாழ்க்கையை எழுதினார். மற்றக் காப்பிய ஆசிரியர்கள் வழக்கமாகச் செய்வதுபோல், கற்பனைகளைக் கூட்டிக் காப்பியத்திற்கு அழகு ஊட்ட முயலவில்லை. தாம் கேட்டறிந்த செய்திகளையும் கற்றுணர்ந்த சான்றுகளையும்மட்டுமே கூட்டிப் பெருநூல் ஆக்கினார். அவராகக் கற்பனை ஒன்றும் சேர்க்கவில்லை. அவர்க்கு முன்னமே ஊர்களில் செவிமரபாக வழங்கியவைகளில் மக்களின் கற்பனை பல இடம் பெற்றிருக்கக்கூடும். சேக்கிழாரைப் பொறுத்தவரையில், அவர் உண்மை என்று கேட்டறிந்த நிகழ்ச்சிகளைமட்டும் எளிய இனிய தமிழில் பாடித் தந்தார். ஆகவே, இடைக்காலத்து இலக்கியத்தில் நாட்டுமக்களின் வாழ்க்கைபற்றி அறிவிக்கும் ஒரு பெருநூலாக உள்ளது பெரியபுராணமே. மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புகள், செயல் முறைகள் முதலிய பலவற்றை அக்காலத்தில் இருந்தவாறு வரலாற்றுப்போக்கில் அறிவதற்கு உதவுவது இந்த நூலே ஆகும்.

சேக்கிழார் சைவ நாயன்மார் எல்லோருடைய வரலாற்றையும் பாடவேண்டும் என்று விரும்பினார். தம் நூலை ஒரு காப்பிய வடிவில் அமைக்க வேண்டும் என்று விரும்பினார். காப்பியம் என்ற காரணத்தால், ஒப்பற்ற காப்பியத் தலைவராக ஒருவரைப் போற்ற வேண்டும் என்ற விதிக்குப் பொருந்தச் சுந்தரமூர்த்தி நாயனாரை அமைத்தார். அவர் கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் பிறந்ததுமுதல் மறுபடியும் மண்ணுலக வாழ்வை விட்டுக் கைலாயம் சென்று சேர்தல் வரையில் அவருடைய முழுவாழ்வையும் கூறுவதாகக் காப்பியத்தை அமைத்தார். நாயன்மார் அறுபத்துமூவருடைய வரலாறும் கூறவேண்டும் என்ற தம் சமயநோக்கத்திற்காக, சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு தலத்தில் திருத்தொண்டத்தொகை என்று தொண்டர் வணக்கம் பாடுவதாகக் குறிப்பிட்டு, அந்தப் பாடலில் உள்ள முறைப்படியே எல்லா நாயன்மாருடைய வரலாறும் கூறிமுடித்து, மறுபடியும் சுந்தரமூர்த்தி நாயனாரின் மற்றத் தல யாத்திரைகளையும் பிறவற்றையும் விளக்கியிருக்கிறார். தம் காப்பியத்தின் பகுதிகளுக்குப் பெயர் வைப்பதிலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல்களின் முதல் தொடர்களையே கையாண்டிருக்கிறார்.

நாயன்மார்களிடத்தில் சேக்கிழார் கொண்டிருந்த பக்தி ஒப்பற்றதாகும். ‘தொண்டர் சீர் பரவுவார்’ எனப் புகழப்பெற்ற அவருடைய வாழ்க்கை மிகப் பண்பட்ட வாழ்க்கை ஆகும். கொலை முதலிய தீமைகளைக் கூறவேண்டிய