பக்கம் எண்: - 162 -

இடங்களில் அவற்றைக் குறிப்பிடவும் கூசுகின்ற அளவிற்கு அன்பு நிரம்பிய நெஞ்சம் படைத்த சான்றோர் அவர். அவர் காலம்வரையில் எத்தகைய பெரியவரையும் அவன் என்று ஒருமையிலேயே நூல்கள் குறித்துவந்தன. ஆனால் சேக்கிழார், நாயன்மார் ஒவ்வொருவரைக் குறிப்பிடும்போது, ஆண் ஆயினும், பெண் ஆயினும், அவர் என்றே மதிப்புப்பன்மைச் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். நூல் முழுதும் இவ்வாறே நாயன்மார்களைப் பெருமதிப்புடன் குறிப்பிட்டு, பக்திச்சுவை பெருக எழுதியுள்ளார். அவர் காலத்துச் சோழ அரசன் அவருக்குப் பெருஞ்சிறப்பு எல்லாம் செய்து அந்த நூலைப் பட்டத்து யானைமேல் வைத்துப் பவனிவரச் செய்து பாராட்டினான். தானே பக்கத்தே இருந்து அவருக்கு கவரி வீசினான், பக்திச்சுவை நிரம்பிய காப்பியமாக இயற்றிய சேக்கிழாரைப் பாராட்டிச் சென்ற நூற்றாண்டில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் புலவர் ஒரு தனி நூல் இயற்றியுள்ளார். சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்னும் அந்த நூலில், ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ (பக்திச் சுவை பெருகுமாறு பாடிய சிறந்த கவிஞரே) என்று அவர் சேக்கிழாரைப் போற்றிக் கூறியுள்ளார்.

நூலின் செய்யுள்கள் எளிய நடையில் அமைந்தவை; தெளிவானவை. ஆசிரியரின் நெஞ்சில் குடிகொண்டிருந்த நேர்மையும் நாகரிகமும் எளிமையும் செம்மையும் நூலின் செய்யுள்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியரின் சொந்தக் கற்பனைகளுக்குச் சிறிதும் இடம் வைத்துக்கொள்ளாமல் தம் ஆராய்ச்சிக்கு எட்டிய உண்மைகளைமட்டும் விளக்கிச் செல்வதே கடமையாகக் கொண்ட காரணத்தால் காப்பியச் சுவை விஞ்சி நிற்காவிட்டாலும், காப்பியத்திற்கு உரிய எல்லா அமைப்பும் கொண்டு விளங்குகிறது இந்த நூல். நெஞ்சில் நிறைந்த அன்பினால் இறைவனை வழிபடுவது ஒன்றே போதும் என்று அதற்குமேல் வேறொரு பயனும் கருதாதவர்கள் சிவனடியார்கள் என்று கூறுமிடத்தில், அந்தப் பக்தி வழிபாடு தவிர முத்தியையும் மதித்து நாடாத பெருமிதமான மனப்பான்மை உடையவர்கள் என்று போற்றியுள்ளார்.

கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

சீவகசிந்தாமணியின் ஆசிரியர் வளர்த்த விருத்தப்பாவை எளிய நடைக்கு உரியதாக்கிக் காட்டியவர் சேக்கிழார்.

பலவகை மக்களின் வாழ்க்கை முறைகளையும் நன்றாகக் கண்டறிந்து ஆங்காங்கே தம் நூலில் சேக்கிழார் விளக்கியுள்ளார். தொழில்வகைகளுக்கு ஏற்ப ஊர்களில் மக்கள் சேர்ந்து வாழ்ந்த காலம் அது. அந்தந்தத் தொழிலைச் சார்ந்த மக்கள் அந்தந்த இடங்களில் தங்கி வெவ்வேறு பழக்க