பக்கம் எண்: - 163 -

வழக்கங்கள் உடையவர்களாய் வாழ்ந்து வந்தனர். பறைகொட்டுபவர், மீன்பிடிப்பவர், வேட்டை ஆடுபவர் ஆகிய பலவகையாரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த வாழ்க்கைகளைத் திறம்பட வருணித்துள்ளார். எடுத்துக்காட்டாக, வேடர்களைப்பற்றிய வருணனையைக் கண்ணப்ப நாயனார்பற்றிய பகுதியில் காணலாம். கண்ணப்பர் வேடர். வேடர்கள் மலையில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தவர்கள். வேட்டைக்கு வேண்டிய தொங்கிய காதுகளை உடைய நாய்கள், அவர்கள் வாழும் பகுதியில் வளர்ந்த விளாமரத்தில் தொங்கும் வலைகள், காட்டு விலங்குகளைப் பிடிப்பதற்காக வீட்டு முற்றங்களில் பழக்கப்பட்டு வளரும் பன்றி மான் கரடி முதலிய விலங்குகள். வீட்டின் எதிரே பாறைகளில் உலரும் தானியங்கள் முதலிய பலவற்றையும் உள்ளவாறே வருணித்துள்ள பாடல்கள் சுவையானவை. வேடர்களின் சிறுவர்கள் வீட்டில் வளர்க்கும் புலிக்குட்டிகளோடும் யானைக் கன்றுகளோடும் விளையாடுகிறார்களாம். இவ்வாறே வேறு பல தொழில் செய்யும் மக்கள் வாழும் இடங்களில் அந்தந்தக் காட்சிகளை வருணித்துள்ளார்.

அந்தந்த மக்கள் பேசும் பேச்சில், அவரவர்கள் அறிந்தவற்றையே உவமையாக அமைக்கும் திறமும் அவருடைய பாடல்களில் காணலாம். மேலே குறித்த வேடர்கள் இருவர் பேசிக்கொள்ளும் பேச்சில், கண்ணப்பர் சிவலிங்கத்தையே பற்றிக்கொண்டு கடமையை மறந்து அங்கிருந்து நகராமல் இருப்பதைப்பற்றி அவர்களுள் ஒருவன் கூறும்போது, “வங்கினைப் பற்றிக்கொண்டு உடும்பு அதை விட்டு நீங்காதிருப்பதுபோல், நம் கண்ணப்பன் அங்கே சிவலிங்கத்தைப் பற்றிக்கொண்டு இருக்கிறான்” என்று உவமை அளிக்கிறார். உடும்பு விடாமல் பற்றிக்கொண்டிருக்கும் காட்சி வேடர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று ஆகும். ஆகவே, அவர்களின் பேச்சில் அது உவமையாக அமைவது மிகப் பொருத்தமாகும்; இயல்பானதாகும்.

சிவனடியார்கள் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்கும் சேக்கிழார், உயர்ந்த மனப்பான்மையையும் கொள்கையையும் எடுத்துரைக்கிறார். “அவர்களுடைய பெருமையைச் சொன்னால், அவ்வகையில் அவர்களுக்கு நிகரானவர்கள் அவர்களே. ஒப்பற்ற தன்மையால் உலகை வெல்ல வல்லவர்கள். இடையூறு என்று ஒன்றுமே இல்லாதவர்கள். மற்றவர்களால் அடைய முடியாத அருமையான நிலையில் நிற்பவர்கள். அன்பின் வழியாகவே, இன்பத்தை நுகர்பவர்கள். நல்வினை தீவினை முதலாக இரண்டு இரண்டாக உள்ள மாயையின் இடர்களைக் கடந்து நிற்பவர்கள்” என்று போற்றப்படுகிறார்கள்.