மிகுந்தனவாய்ச் செறிவு உடையனவாய்
இருந்தபோதிலும் அவற்றின் நடையில் இயல்பான ஓட்டம் அமையவில்லை. அவருடைய வாழ்வில்
இருந்த பெருமிதமும் கடுமையும் அவர் இயற்றிய செய்யுள்களிலும் அமைந்தன; உள்ளத்து உணர்வின்
செம்மையும் இனிமையும் படியவில்லை. தமிழ்ப் புலவர் வேறு எவர்க்கும் இல்லாத பெருஞ்
சிறப்புகளை வாழுங்காலத்தில் பெற முடிந்ததே அல்லாமல், அவர் படைத்த நூல்கள் அத்தகைய
பெருஞ் சிறப்புகளோடு விளங்க முடியவில்லை. தக்கயாகப் பரணி என்ற ஒரு நூல்மட்டும் தமிழ்
இலக்கியங்களுள் ஒரு சிறப்பிடம் பெற்று விளங்குவது எனலாம். ஆயினும் அதுவும் கலிங்கத்துப்
பரணிக்கு அடுத்த நிலையிலேயே இன்று வைத்து எண்ணப்படுகிறது. அது 815 தாழிசைகளால் அமைந்த
நூல். ஆசிரியரின் பரந்த அறிவைப் புலப்படுத்தும் நூல் அது. பரணியில் போர்க்களத்தைக்
காளி பேய்களுக்குக் காட்டுவதாகக் கூறுவது மரபு. ஆனால் ஒட்டக்கூத்தரின் பரணியில் சிவபெருமான்
உமாதேவிக்குக் காட்டியதாகப் பாடப்படுகிறது. சைவ சமயப் பெருமையை அந்த நூல் பல இடங்களிலும்
வலியுறுத்துகிறது. நூலாசிரியர் கலைமகளிடத்துப் பக்தி பூண்டவர் என்பதும் அந்த நூலால்
விளங்குகிறது. வாழ்த்துக் கூறும் பகுதியில் நூல் இயற்றுவதற்கு உதவி புரிந்த இரண்டாம்
இராசராச சோழனுடைய பெருமை சிறப்பித்து வாழ்த்தப்படுகிறது.
இராமாயணத்தின் தொடர்பாக இவரைப்பற்றி
வழங்கும் கதையும் உள்ளது. கம்பரும் ஒட்டக்கூத்தரும் போட்டியிட்டுக் கொண்டு இராமாயணத்தைப்
பாடத்தொடங்கினார்கள் என்றும், கம்பர் பாடிய பாட்டுகளின் சுவையும் நயமும் மேம்பட்டு
விளங்குவதை அறிந்தவுடன் தாம் இயற்றிய நூலின் பகுதிகளை அழித்துவிட்டார் என்றும்,
அழியாமல் தப்பியது ஏழாம் காண்டமாகிய உத்தரகாண்டம் ஒன்றே என்றும் கதை கூறும்.
கம்பர்
‘கம்பர் பிறந்த தமிழ்நாடு’
என்று தமிழ்நாட்டிற்குப் பெருமை தந்த புலவராகப் பாரதியாரால் பாராட்டப்பெற்றவர்
கம்பர். தமிழிலக்கிய வானில் பேரொளி வீசும் கவிஞர் அவர். மாயூரத்துக்கு அருகே
ஒரு சிற்றூரில் காளிபூசை செய்யும் எளிய குடும்பத்தில் பிறந்த அவர், உலகத்துச், சிறந்த
கவிஞர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார். சிறுவராக இருந்தபோது ஒரு கம்பங்கொல்லையை
காவல் புரிந்த காரணத்தால் கம்பர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். காளிகோயிலில்
ஒரு கம்பத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவர்.
காஞ்சி நகரத்தில் உள்ள சிவனாகிய ஏகம்பனை வழிபடும் குடும்பத்தில் பிறந்ததனால்
அந்தப் பெயர் அமைந்தது என்று கூறுவோரும் உண்டு. அவரை இளமையில்
|