பக்கம் எண்: - 166 -

வேறு வகையில் காரணம் கற்பிக்கப்பட்டுக் கதை புனையப்பட்டதும் உண்டு. அவர் இலக்கண இலக்கியங்களில் வல்லவர்; வடமொழிக் கல்வியும் நிரம்பியவர்; பழைய மரபுகளை விடாமல் போற்றி, பிறர் செய்யும் தவறுகளைக் கடுமையாக எடுத்துரைத்துக் கடிபவர். விக்கிரம சோழனுக்கு (கி. பி. 1118 - 1133) அரசவைப் புலவராக விளங்கியவர். அவனுடைய மகனுக்கும் (கி. பி. 1133 - 1150) பேரனுக்கும் (கி. பி. 1146 - 1163) தமிழ் கற்பித்த ஆசிரியராகவும் அவர்களுடைய அரசவைப் புலவராகவும் பெருமதிப்புடன் வாழ்ந்தவர். அந்த மூன்று அரசர்களைப்பற்றியும் தனித்தனியே உலா நூல்கள் பாடியிருக்கிறார். அந்த மூன்று நூலும் சேர்ந்து மூவருலா எனப்படும். அவர்களுள் விக்கிரம சோழனுடைய வெற்றியைப் பாராட்டி அவர் பாடிய பரணி ஒன்று உண்டு. கலிங்கப் பரணி என்னும் அந்நூல் இப்போது கிடைக்கவில்லை. கலிங்கத்துப்பரணி என்னும் சயங்கொண்டார் பாடிய நூல் பெற்ற பெறும் புகழால், ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கப் பரணி மறைந்தது. ஆயினும், சிவனைப் பாடிய மற்றொரு பரணி இன்றும் உள்ளது. அது தக்கயாகப் பரணி எனப்படுவது. தட்சனுடைய வேள்வியை அழித்துச் சிவபெருமான் பெற்ற வெற்றியைப் போற்றிப் பாடிய பரணிநூல் அது.

அந்த மூன்று சோழர்களுள் மற்றொருவருனாகிய இரண்டாம் குலோத்துங்கனைப்பற்றி உலா பாடியதோடு ஒரு பிள்ளைத்தமிழும் ஒட்டக்கூத்தர் பாடினார். சோழர்களின் அமைச்சர், சேனைத்தலைவர் ஆகியவர்கள் மேலும் சில நூல்கள் பாடினார்.

மூன்று பெருமன்னர்களின் அரசவையை அணிசெய்து நெடுங்காலம் வாழும் பேறு பெற்றவர் ஆகையால், ஒட்டக்கூத்தர் பல பெரிய பட்டங்களுக்கும் சிறப்புகளுக்கும் உரியவரானார். அரண்மனையில் அவர் இட்டது சட்டமாக இருந்தது. அவருடைய வெறுப்புக்கு ஆளானால் எந்தப் புலவர்க்கும் வாழ்வு இல்லை என்னும் நிலைமை இருந்தது. அதனால் பிற்காலத்தில் சில கதைகள் புனையப்பட்டன. புகழேந்திப் புலவர் அவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், ஒட்டக்கூத்தர் அவர்மேல் பொறாமை கொண்டு இன்னல் பல விளைத்தார் என்றும் கதைகள் புனையப்பட்டன. அவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தர்க்குப் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்.

கவிச்சக்கரவர்த்தி எனச் சோழவேந்தரால் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் மரபுகளைப் போற்றி நூல்கள் இயற்றினார்; வாழ்வின் உணர்ச்சிகள் உந்த நூல்கள் இயற்றும் வாய்ப்பு அவர்க்கு இல்லை. ஆதலின், மக்களால் கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட கம்பரின் நூல் எய்திய சிறப்பை ஒட்டக்கூத்தரின் நூல்கள் பெறமுடியவில்லை. செய்யுள்கள் வருணனைகள்