முதலான குற்றங்கள் அடியோடு ஒழிவதைப்
போன்றது என விளக்கியுள்ளார். கண்ணப்ப நாயனார் வளர்ந்து பதினாறு வயது நிரம்பிப்
பலவகைப் பயிற்சியும் நிறைந்து விளங்கும் நிலைமை, பதினாறு கலையும் நிரம்பிய முழுமதிபோல்
உள்ளதாம்; புண்ணியங்கள் திரண்டு மேன்மேலும் வளர்ந்து விளங்குவதுபோல் உள்ளதாம்.
குளிர்காலத்தில் பனிசூழ்ந்து குன்றுகளை
மூடியிருக்கும் காட்சி, குளிருக்காகக் குன்றுகளும் வெண்ணிறமான போர்வை போர்த்துக்
கொண்டிருப்பதுபோல் உள்ளதாம். குளிரும் பனியும் மிகுந்தபடியால் தன் கைகளை நீட்டி
நிமிர்க்க முடியாதவன்போல் சூரியன் மெல்லக்கதிர்களை விரித்து விரித்து மூடிக்கொள்கிறானாம்.
அதனால் வெயில் தோன்றித் தோன்றி மறைகிறதாம்.
தமிழ்நாட்டில் உள்ள பாலாறு, வெள்ளம்
வரும்போது தவிர மற்றக் காலங்களில் நீர் இல்லாமல் மணல் வெளியாகக் காணப்படுவது.
ஆகவே, நீர்வளம் குறைந்ததாகவே பொதுவாக அது கருதப்படுகிறது. ஆனாலும், எல்லாக் காலங்களிலும்
அதன் மணலைத் தோண்டி, ஊற்றுநீரைப் பயன்படுத்துவது வழக்கம். அதை நன்கு உணர்ந்த சேக்கிழார்,
அந்த ஆற்றை வருணிக்க நேர்ந்த போது, நீர்ப்பெருக்கு இல்லாதது என்ற குறை தோன்றாதபடி
ஓர் உவமையை அமைத்துச் சிறப்பித்துள்ளார். குழந்தை தன்கையினால் தடவிவாய்வைத்து
உறிஞ்சும்போது அதற்குவேண்டிய அளவுக்கு முலைப்பால் சுரந்து ஊட்டும் தாய்போல், உழவர்கள்
வெயில் காலத்திலும் மணல்மேட்டைத் தோண்டி ஊற்றெடுக்க, நீர் வாய்க்கால் வழியே
ஓடி ஆற்றின் இருபக்கமும் பெருகி வயல்களில் பாயச் செய்வது பாலாறு என்று வருணித்துள்ளார்.
அந்த அழகிய உவமையின் வாயிலாக, பாலாற்றின் வளத்தை ஒரு தாயின் அன்பு மனத்தின்
சிறப்புக்கு உயர்த்தியுள்ளார். நீர் குறைந்தது என்ற பழியை மறைத்ததுமட்டும் அல்லாமல்,
அளவுக்குமேல் தந்துகெடுத்துவிடாமல், தேவையான அளவிற்குத் தந்து காப்பாற்றுவது என்ற
பெருமையும் தந்துள்ளார். இவ்வாறு எளிய சொற்களால் இனிமையாக வருணனைகளை அமைக்கும்
சிறப்பை அவருடைய காப்பியத்தில் காணலாம்.
ஒட்டக்கூத்தர்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழரின்
அவைக்களத்தில் பெருஞ்செல்வாக்குடன் விளங்கிய புலவர் ஒட்டக்கூத்தர். கூத்தர் என்பது
நடனமாடும் கடவுளாகிய சிவனுடைய பெயர். அவர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு
காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப் பெற்றார்.
அந்தச் சொல்லை விளக்குவதற்காக
|