பக்கம் எண்: - 169 -

உழவரின் தொழிலையும் பண்பையும் சிறப்பித்து ‘ஏர் எழுபது’ ‘திருக்கை வழக்கம்’ ஆகிய நூல்களைக் கம்பர் இயற்றினார். கலைமகளைப் போற்றி அவர் பாடிய நூல் சரசுவதி அந்தாதி. அவர் நம்மாழ்வாரிடத்துப் பூண்ட பக்தியின் சிறப்பு, ‘சடகோபர் அந்தாதி’ என்ற அவர் நூலால் விளங்குகிறது. ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன்’ என்பது நாட்டில் ஒரு பழமொழிபோல் வழங்குகிறது. அந்தப் பாட்டும் கம்பர் இயற்றியது என்று அவர் பெயரால் வழங்குகிறது. கம்பராமாயணத்தில் அப் பாட்டு இல்லை. அவ்வாறு கம்பர் பெயரால் தனிப்பாடல்களாக உள்ளவை சில; கம்பராமாயணத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பாட்டுகள் பல. எது எவ்வாறாயினும், கம்பர் பெருங்கவிஞர் என்பது நாட்டு மக்களை அனைவரும் உணர்ந்த ஒரு கருத்தாக நிலவியது. ‘கல்வியிற் பெரியர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் பழமொழிகள் அதற்குத் தக்க சான்றுகள் ஆகும்.

கம்பராமாயணம்

மற்ற நூல்களைவிட அவருடைய புகழைக் காப்பது கம்பராமாயணமே ஆகும். அவருடைய கவிதைத் திறமையால் மிக விரைவில் அதைப் பாடி முடித்தார் என்பதை உணர்த்தும் கதைகளும் உண்டு. அந்தப் பெருநூல் பத்தாயிரம் பாட்டுகள் கொண்டது. அதைத் திருவரங்கத்தில் அரங்கேற்றினார் என்று கூறுவர்.

இராமனுடைய அரிய செயல்களை ஒட்டிய கதைகள் சில பழங்காலத்திலேயே தமிழ்நாட்டில் வழங்கி வந்தன. சங்க இலக்கியத்திலும் சில கதைப் பகுதிகள் உள்ளன. அவற்றுள் சில, வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத கதைப் பகுதிகளாக - புதுக் கற்பனைகளாக - உள்ளன. காட்டில் பர்ணசாலையில் சீதையை இராவணன் கவர்ந்து தன் விமானத்தில் எடுத்துச் சென்றபோது, சீதை தன் அணிகலன்களை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக் கிஷ்கிந்தையில் இட்டாள். அந்த அணிகலன்கள் குரங்குகளின் கையில் அகப்பட்டன. அப்போது அந்த வானரங்கள் அவற்றை வியப்போடு பார்த்து, அவற்றைக் கொண்டு இன்னது செய்வது என்று தெரியாமல், தாறுமாறாக எடுத்து அணிந்துகொண்டனவாம். விரலில் அணிய வேண்டியவற்றைச் செவியில் அணிதல் முதலான முரணான வழியில் அந்த அணிகலன்களை அணிந்து மகிழ்ந்தனவாம். இந்தக் குறிப்பு சங்க நூல்களுள் ஒன்றாகிய புறநானூற்றில் உள்ளது. அகநானூற்றில் உள்ள மற்றொரு குறிப்பு வருமாறு : இராமன் வானர சேனையுடன் கடல் கடந்து இலங்கைக்குச் செல்லுமுன் இராமேசுவரத்தின் அருகே ஓர் ஆலமரத்தின் அடியில் தங்கியதாகவும், அந்த மரத்தடியில் உடன் உள்ளவர்களோடு