செயல்திட்டங்களைப்பற்றி ஆலோசனை
செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த ஆலமரத்தில் இருந்த பறவைகள் எல்லாம்
கூடி ஒலி எழுப்பி, மறைவாகச் செய்யப்படும் ஆலோசனைக்கு இடையூறு செய்தனவாம். அந்நிலையில்
அவற்றின் ஆரவாரமான பெரிய ஒலி அடங்குமாறு செய்வதற்காக, இராமன் தன் கையால் சைகை
செய்து பறவைகளை அடக்கினானாம். உடனே பறவைகள் எல்லாம் அமைதியாக அடங்கிவிட்டனவாம்.
இவ்வாறு இராமனைப்பற்றிய கதைக்
குறிப்புகள் ஆங்காங்கே பழைய தமிழ் நூல்களில் உள்ளன. அவற்றிற்குப்பின், ஆழ்வார்களின்
பாசுரங்களில் இராமாயணச் சுருக்கமும் அரிய செயல்கள் பற்றிய குறிப்புகளும் கற்பனைகளும்
பல உள்ளன.
ஆழ்வார்களும்
கம்பரும்
ஆழ்வார்களில் பலர் இராமபிரானிடம்
கொண்ட பக்தியைப் பாடியுள்ளனர். குலசேகர ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இராம அவதாரத்தில்
மிகுந்த ஈடுபாடு கொண்டு பல பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் நன்றாகப்
பயன்படுத்திக் கொண்டார் கம்பர். எடுத்துக்காட்டாக, ஒன்று காண்போம் : திருமங்கையாழ்வார் குகனிடம் இராமன் செலுத்திய அன்பைப் போற்றி ஒரு பாட்டுப் பாடியுள்ளார். “குகன்
ஏழை, ஏதும் அற்றவன், தாழ்ந்தவன் என்று எண்ணி ஒதுக்காமல், அவனிடம் இரக்கம் கொண்டு
இனிய அருள் சுரந்தாய். அவனிடம் சீதையையும் இலக்குமணனையும் அறிமுகப்படுத்தி, ‘இவள்
உன் தோழி, இவன் உன் தம்பி’ என்று சொன்னதோடு நிற்கவில்லை. மிக மகிழ்ந்து,
‘நீ எனக்குத் தோழன்’ என்று கூறினாய். அந்த அன்பு நிரம்பிய சொற்கள்
வந்து என் மனத்தில் இருப்பதால், உன் திருவடிகளை அடைந்தேன்” என்கிறார் ஆழ்வார்.
அனுமானிடம் இராமபிரான் செலுத்திய அன்பைப்பற்றிப் பாடும் இடத்தில், “காற்றின்
மகனாகிய அனுமனைக் குரங்கு என்றும் விலங்கு என்றும் வேறு சாதி என்றும் ஒதுக்கவில்லை.
‘மகிழ்ச்சியோடு கடல்போல் பேரன்பு பெருக நீ செய்த உதவிக்குக் கைம்மாறு
இல்லை. குற்றமற்ற வாய்மை உடைய உன்னோடு உடன் இருந்து நான் உண்பேன்’ என்று
சொல்லி உடன் உண்டாய்” என்கிறார். குகனைத் தம்பி என்று முறை கொண்டாடியதாகத்
திருமங்கையாழ்வார் பாடிய பாட்டை மனத்தில் கொண்டு, கம்பர் அழகாகக் கற்பனையை
வளர்த்துள்ளார். “தசரதனுக்கு நாங்கள் நான்கு பேர் மக்களாகப் பிறந்தோம்.
இப்போது குகனோடு ஐவர் ஆனோம்” என்று இராமன் மகிழ்வதாகப் பாடியுள்ளார்.
கங்கைக்கரையில் குகன் இராமனைக்
கண்டதுமுதல் பேரன்பு கொண்டு பணிவிடை செய்தான். அவனை விட்டு நீங்காமல் அங்கேயே
இருந்தான்.
|