பக்கம் எண்: - 172 -

புகலருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் உந்தை.

இவ்வாறு, திருமங்கையாழ்வாரின் பாசுரம் தூண்டிவிட்ட கற்பனையைக் கம்பர் தம் காப்பியத்தில் சுவைபட வளர்த்துள்ளார். ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள நயமான பலவகைக் குறிப்புகளையும் இவ்வாறு கம்பர் தம் காவியத்தில் பயன்படுத்தியுள்ளார்.

வால்மீகியும் கம்பரும்

வால்மீகி இயற்றிய ஆதி காவியத்தை ஒட்டிக் கம்பர் தம் காப்பியத்தை எழுதியபோதிலும், கம்பராமாயணம் மொழி பெயர்ப்பும் அல்ல; வெறுந்தழுவலும் அல்ல. ஒரு புதுக் காப்பியம் போலவே விளங்குமாறு கம்பர் தம் கற்பனைத் திறனால் படைத்துத் தந்துள்ளார். வால்மீகியால் உயர்ந்த காப்பியத் தலைவர்களாகப் படைத்துக்காட்டப்பட்ட இராமனும் சீதையும், கம்பராமாயணத்தைக் கற்பவர் கேட்பவர்களின் நெஞ்சில் தெய்வங்களாகக் காட்சியளிக்கின்றனர். கம்பருக்குப் பிறகே இந்தியா முழுவதும் இராம வழிபாடு பெருகியது என்பர். குமரகுருபரர் என்னும் தமிழ்நாட்டுத் துறவியார் கங்கைக்கரையில் கம்பராமாயணக் கதையைப் பரப்பினார் என்றும், அது அங்கே பரவிய பிறகு இந்தியில் துளசிதாசர் இராமாயணம் இயற்றினார் என்றும், அதனாலேயே துளசி படைத்த இராமனும் சீதையும் பக்திக்கு உரிய தெய்வங்களாக விளங்குகிறார்கள் என்றும் சிலர் கூறுவர். தமிழர் வாணிகத்தின் காரணமாக இந்தோனேசியா, தாய்லாந்து, சயாம் முதலிய நாடுகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சென்றுவந்தபோதும், அங்கேயே பலர் குடியேறியபோதும், கம்பராமாயணக் கதைப் பகுதிகள் அந்த நாடுகளில் பரவின. இன்றும் அங்கே கம்பராமாயணத்தை ஒட்டி அமைந்த சிற்பங்களும் கதைகளும் வாழ்கின்றன.

வால்மீகி இராமாயணத்தில் உள்ள பலவற்றைக் கம்பர் தம் காவியத்தில் அவ்வாறே தந்துள்ளார். சிலவற்றை விரிவாக்கி எழுதியுள்ளார். வால்மீகி சொல்லாத சிலவற்றைத் தாமே படைத்துத் தந்துள்ளார். பழையன புதியன எவையாயினும், கம்பர் கைப்பட்ட பிறகு அவை புது மெருகுபெற்று ஒளிர்கின்றன.

வாலியின் மகன் அங்கதனைப்பற்றி வால்மீகி சொல்லாத முறையில் கம்பர் சொல்லியுள்ளார். அங்கதன் அடைக்கலம் கம்பரின் புதிய படைப்பு. வாலி இறக்கும்போது தன் மகன் அங்கதனை இராமனிடம் ஒப்படைத்து அவனைக் காத்து அருள் புரியுமாறு கேட்டுக்கொள்கிறான். இராமன் வாலியின் வேண்டுகோளுக்கு இசைந்து அடைக்கலமாக ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாகத் தன் உடைவாளை அங்கதனிடம் அளிக்கிறான். அன்றுமுதல்