அந்த உடைவாளை ஏந்தி இராமன்
பக்கத்தில் நிற்பதே அங்கதனுக்குத் தொழில் ஆகிறது. முடிசூட்டு விழாவினை வருணிக்கும்போது
கம்பர், “அங்கதன் உடைவாள் ஏந்த” என்று அந்தக் காட்சியைக் குறிப்பிட்டுள்ளார்.
கம்பரின் ‘மாயாசனகப்
படலம்’ வால்மீகி நூலில் இல்லாதது. இலங்கையில் அசோகவனத்தில் சீதையின்
மனத்தை மாற்றுவதற்காக அரக்கர்கள் செய்யும் சூழ்ச்சிகள் பல. அவற்றுள் ஒன்று இது.
சீதையின் தந்தையாகிய சனகனைப்போல் ஓர் உருவம்படைத்து அதைக் கொண்டுவந்து சீதையின்
முன் நிறுத்தி இராவணனுக்கு இணங்கிப் போகுமாறு பேசச் செய்கிறார்கள். அந்த மாயா
சனகன் சீதையைப் பார்த்துப் பேசும்போது, தன்னால் தன் தந்தைக்கும் துன்பம் நேர்ந்ததே
என்று சீதை கலங்குகிறாள். மாயா சனகன் சீதையை மகளே என அழைத்து இராவணனுடைய விருப்பம்
போல் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறான்; அவளும் தானும் உற்ற துன்பங்கள் தீர்வதற்கு
அதுவே வழி என்றும் கூறுகிறான். ஆனால் சீதையோ, “இப்படியா உன் மனம் மாறிப்
பேசவேண்டும்?” என்று கடிந்து கூறுகிறாள். அந்தச் சூழ்ச்சியும் சீதையிடம் பலிக்கவில்லை
என்று கூறுவது ‘மாயாசனகப் படலம்.’
வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி
தாரையைச் சுக்கிரீவன் தன் மனைவியாகக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில்
உள்ள கதை. கம்பர் தம் நூலில் தாரையை உயர்ந்தவளாகப் படைத்து, சுக்கிரீவனையும்
குற்றமில்லாதவனாகத் தீட்டினார். கணவனை இழந்த பின் தாரை மங்கல அணி துறந்து, மலர்புனைதல்
முதலியன இல்லாமல், துயரமே வடிவாய் விதவை வாழ்வை நடத்துவதாகத் தமிழ் மகளிர் போற்றத்தக்க
வகையில், கம்பர் காட்டியுள்ளார்.
வால்மீகியின் இராமாயணத்தில்
இரணியன்பற்றிய விளக்கம் இல்லை. கம்பர் அதை ஒரு தனிப் படலத்துள் எடுத்துரைக்கின்றார்.
கம்பராமாயணத்துள் இரணியப் படலம் மிகச் சிறந்த ஒரு பகுதியாகப் போற்றப்படுகிறது.
திருமணத்துக்கு முன்பு சீதையும் இராமனும்
ஒருவரை ஒருவர் கண்டுகொண்டதாக வால்மீகி கூறவில்லை. கம்பர் அவர்களின் திருமணத்தைக்
காதல் மணமாக அமைத்துக் காட்டியுள்ளார். மிதிலை நகரத் தெருவழியே விசுவாமித்திர
முனிவரோடு இராமன் நடந்து சென்றபோது கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை அவனைக்
கண்டாள் என்றும், இராமனும் அவளைக் கண்டான் என்றும் கூறி, அவர்களின் நெஞ்சில்
அப்போதுமுதல் காதல் வளர்ந்து வருவதாக விளக்கியுள்ளார். இவ்வாறு வால்மீகியின் நூலில்
இல்லாமல் தாம் படைத்த நிகழ்ச்சியை மறுபடியும் கம்பர் இராமன் வாயிலாகவே கூறவைத்து
வலியுறுத்தியிருக்கிறார். சீதையைத் தேடி வருமாறு
|