பக்கம் எண்: - 174 -

அனுமனை அனுப்பும்போது இராமன் அந்த நிகழ்ச்சியை எடுத்துரைத்து, “உன்னை என் தூதன் என்று சீதை நம்புவதற்காக இந்தச் செய்தியை நினைவூட்டுக” என்கிறான்.

பஞ்சவடியில் இருந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றதை வால்மீகி சொன்ன முறை வேறு; கம்பர் சொன்ன முறை வேறு. இராவணன் சீதையைக் கைகளால் பற்றித் தூக்கிச் சென்றதாக வால்மீகர் கூறியுள்ளார். சீதையின் உயர்வுக்கு ஓர் இழுக்குப் போல் அது தோன்றிய காரணத்தால், தமிழ்மக்களின் மனத்தில் சீதைக்கு உயர்ந்த இடம் வாய்க்காமல் போகுமே என்று அஞ்சினார் கம்பர். அதனால், பஞ்சவடியில் பர்ணசாலையில் இருந்த சீதையை அந்தக் குடிசை தரையோடு வருமாறு பெயர்த்து எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைத்தான் என்றும், அவளைத் தொடவில்லை என்றும் கம்பர் கூறியுள்ளார். இவ்வாறு தாம் படைத்த புதுமையைத் திரும்பத் திரும்ப மற்றவர்கள் வாயிலாக வலியுறுத்தியிருக்கிறார். கழுகரசன் சடாயு இராவணனைத் தடுத்து அவனுடைய வாளால் விழுந்து கிடந்து, மாய்வதற்கு முன் இராமனைப் பார்த்துக் கூறும் செய்தியில் சீதையைப் பர்ணசாலையோடு தூக்கிச் சென்றதாக உரைத்துள்ளான். மறுபடியும் மற்றோரிடத்தில், அசோகவனத்தில் அனுமனைக் கண்டபோது சீதை அந்தப் பர்ணசாலை அங்கே இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். அனுமன் திரும்பி வந்து இராமனிடம் செய்தி சொல்லும்போது, “ஐயா! உன் தம்பி தன் கையால் கட்டிய அந்தப் பர்ணசாலையில் சீதை இருக்கக் கண்டேன்” என்று கூறுவதாக எழுதியுள்ளார்.

இவ்வாறு கம்பரின் படைப்பு முக்கியமான சில இடங்களில் வேறுபட்டுச் செல்கிறது. வேறுபடும் இடங்கள் எல்லாம் கதைச் சுவையும் பண்பாட்டுச் சிறப்பும் மிகுந்து விளங்குகின்றன.

கற்பனை வளம்

வால்மீகர் சொல்லாதவற்றை விளக்கி அழகுபடுத்துவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. வால்மீகர் சொன்னவற்றையே புதிய அழகோடு விளக்கிக் கூறுவதிலும் கம்பருக்குச் சிறப்பு உண்டு. இயற்கைக் காட்சிகளை எடுத்துரைக்கும் வருணனைப் பகுதிகளிலும் கம்பரின் தணித்திறமை விளங்குகிறது. மருத நிலத்தை (வயல் சார்ந்த நிலத்தை) வருணிக்கும் இடத்தில், ஓர் அரசன் அல்லது அரசி கலைமண்டபத்தில் வீற்றிருப்பதுபோல் மருதம் கலையின் சூழலில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார். குளிர்ந்த சோலையில் மயில்கள் தோகை விரித்து நடனம் ஆடுகின்றன. தாமரைகள் விளக்குகள் ஏந்துவனபோல் செந்நிற அரும்புகளையும் மலர்களையும் ஏந்துகின்றன; வானத்து முகில்கள் முழவுபோல் ஒலிக்கின்றன; குவளை மலர்கள்