பக்கம் எண்: - 175 -

மலர்ந்துள்ள காட்சி, நாட்டியத்தைக் காண வந்தோரின் கண்கள் நோக்குதல்போல் உள்ளது; பொய்கைகளின் அலைகள் நாட்டிய அரங்கின் திரைகள்போல் உள்ளன; நாட்டியத்திற்கு ஏற்ற பாடல்களைப் பாடுவனபோல் வண்டுகள் ஒலிக்கின்றன; இத்தகைய கலையரங்கிலே மருதம் என்னும் அரசி வீற்றிருந்தாள் என்கிறார்.

கோசல நாட்டு வளமான வாழ்வை வருணிக்கும் இடத்தில், கம்பர் ஒப்பற்ற கற்பனையில் ஈடுபடுகிறார். பெண்கள் எல்லோரும் அழகு வடிவங்களாக விளங்குகிறார்களாம். அவர்கள் பொருட்செல்வம், கல்விச்செல்வம் இரண்டும் நிரம்பியவர்களாம். அதனால் கோசல நாட்டில், துன்புற்று வந்தவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் நாள்தோறும் விருந்தினரை உபசரிப்பதும் தவிர, வேறு நிகழ்ச்சிகள் இல்லையாம். மக்களின் வாழ்வில் குற்றங்கள் இல்லாமையால், எம பயம் இல்லை. மக்களின் மனம் செம்மையாக இருப்பதால் சினம்கொண்டு விதிக்கும் தண்டனை இல்லை. நல்ல அறம் தவிர, வேறு ஒரு தீமையும் இல்லாமையால் உயர்வு உண்டே தவிர வீழ்ச்சி அல்லது கேடு இல்லை. மக்களிடையே பொருள்களைக் கவர்ந்து செல்லும் கள்வர் இல்லாமையால், பொருள்களுக்குக் காவல் இல்லை. கொடுத்தால் பெற்றுக்கொள்ளத்தக்க வறியவர் இல்லாமையால், கொடுக்கும் கொடையாளர்களுக்கு நாட்டில் இடம் இல்லை. கல்லாதவர்கள் இல்லாதபடியால், கற்று வல்லவர்கள் என்று யாரையும் சிறப்பித்துக் கூற இடம் இல்லை; எல்லா மக்களும் எல்லா வகைச் செல்வமும் பெற்று விளங்குவதால், செல்வம் இல்லாதவர்கள் இல்லை; செல்வம் உடையவர்களும் இல்லை. நாட்டில் வறுமை இல்லாத காரணத்தால் வண்மை (வள்ளல் தன்மை) என்பதற்கு இடம் இல்லாமற்போயிற்று. பகைவர் என்று யாரும் இல்லாமையால், எதிர்த்துத் தாக்கும் வலிமையும் இல்லாமற் போயிற்று. யாரும் பொய் பேசாமையால், உண்மை என்பது சிறப்பாக விளங்கவில்லை. பலவற்றைக் கேட்டு அறியும் அறிவு எல்லோரிடமும் ஓங்கியிருப்பதால், அறிவின் சிறப்புக்கும் தனியிடம் இல்லை

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்.

இது கோசல நாட்டுச் சிறப்பைக் கூறும் வருணனையாக இல்லை. பொதுவாக நாட்டின் எதிர்காலத்தைப்பற்றிப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரும்புலவர் கண்ட ஒப்பற்ற கற்பனைக் காட்சியாக உள்ளது. ஒரு நல்ல