பக்கம் எண்: - 176 -

நாடு இப்படி இருத்தல்வேண்டும் என்று அரசியல் ஞானி ஒருவர் வகுத்த நல்ல இலக்கணமாகவும் உள்ளது.

சுவைபட விளக்குதல்

கதைப்போக்கில் நிகழ்ச்சிகளை விளக்குவதிலும் கம்பர் இணையற்றவராய் விளங்குகிறார். அனுமன் சீதையைக் கண்டபின் கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து இராமனிடம் செய்தி கூறுகிறான். “இலங்கையில் கணவனைப் பிரிந்து தவம்புரியும் ஒரு நங்கையை மட்டும் காணவில்லை, ஐயா! நல்ல குடிப்பிறப்பு என்ற ஒன்று, பொறுமை என்ற பண்பு ஒன்று, கற்பு என்ற பெயருடையது ஒன்று அங்கே மகிழ்ந்து நடம் புரிவதைக் கண்டேன்” என்று தன் ஆர்வமும் மகிழ்ச்சியும் சீதையின் உயர்வும் தூய்மையும் ஒருங்கே புலப்படும் வகையில் இராமனிடம் எடுத்துரைக்கிறான்.

போர் வந்தது. கும்பகருணன் உறங்குகிறான். அவனை எழுப்பிச் செய்தி அறிவித்து அழைத்து வருமாறு இராவணன் ஆட்களை அனுப்புகிறான். ஆட்கள் சென்று எழுப்புகிறார்கள். எழுந்த கும்பகருணனிடம் செய்தியை அறிவிக்கிறார்கள், கும்பகருணன் திகைப்படைந்து, “என்ன! போர் ஏற்பட்டுவிட்டதா? கற்புக்கரசியாகிய சானகியின் துயரம் இன்னும் தீரவில்லையா? மண்ணுலகும் விண்ணுலகமும் பரந்திருந்த நம் குலத்தின் புகழ் போனதோ? அழிவுக் காலம் வந்துவிட்டதோ?” என்கிறான். “குற்றம் இல்லாத பிறனுடைய மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைக்கிறோம்; பிறகு உயர்ந்த புகழை விரும்புகிறோம்; மானத்தைப்பற்றிப் பெரிதாகப் பேசுகிறோம்; இடையே காமத்தைப் போற்றுகிறோம்; ஆனால் மனிதரைக் கண்டு கூசுகிறோம்! நம்முடைய வெற்றி எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று வெறுத்துக் கூறுகிறான். இவ்வாறு கும்பகருணன் தயங்குவதையும் தனக்கே அறிவுரை கூறுவதையும், இராவணன் எதிர்பார்க்கவில்லை. தன் தம்பியரில் ஒருவன் பகைவரிடம் போய்ச் சரண் அடைய, இன்னொருவன் இப்படிப் பேசுகிறானே என்று இராவணனுடைய மனம் வருந்தியது. ஆயினும், அவனுடைய இரும்பு நெஞ்சத்தின் உரம் தளரவில்லை. “எனக்கு முன்னே போர் செய்து இறந்தவர்கள் எல்லாரும் இந்தப் பகையை முடிப்பார்கள் என்று நம்பி நான் இதில் இறங்கவில்லை. எனக்குப் பின் இருக்கப்போகின்றவர்கள் எல்லாரும் போரில் வென்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையாலும் இந்தப் போரை ஏற்றுக்கொள்ளவில்லை. தம்பியாகிய நீ அவர்களைப் போரில் வென்று எனக்கு வெற்றி பெற்றுத் தருவாய் என்று உணர்ந்து நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய வலிமையையே நோக்கி இவர்களின் பெரும்பகையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சிறுதும் கலங்காமல்