பக்கம் எண்: - 177 -

எடுத்துச் சொல்லித் தன் உறுதியையும் அஞ்சாமையையும் புலப்படுத்துகிறான். போர்களத்தில் இராமனுடைய அம்பால் முடியிழந்து அவமானப்பட்டுத் திரும்பும் நிலையில் இராவணனுடைய மனநிலையைக் கம்பர் ஒரு பாட்டில் விளக்குகிறார். “வானுலகம் சிரிக்குமே! மண்ணுலகம் சிரிக்குமே! நான் எள்ளி நகையாடிய பகைவர் எல்லாரும் இப்போது என்னைப் பார்த்து நகைப்பார்களே” என்று இராவணன் நாணவில்லையாம். சீதை இதைக் கேட்டு நகைப்பாளே என்றுதான் இராவணன் நாணம் அடைந்து வாடுகிறானாம். அந்நிலையில், அவன் போர்க்களத்தை விட்டு ஊர்க்குள் செல்லும் காட்சியையும் கம்பர் மிக நயமாகக் குறிப்பிடுகிறார். தன் முடியை மட்டும் அல்லாமல் வீரத்தையும் போர்க்களத்தில் போட்டுவிட்டு வெறுங்கையோடு இலங்கைக்குள் புகுந்தான் என்கிறார். அவன் இங்கும் அங்கும் திசைகளைத் திரும்பிப் பார்க்கவில்லையாம். தன் வளமான நகரத்தையும் கண்ணெடுத்துப் பார்க்கவில்லையாம். தன்னிடம் அன்புள்ளவர்கள் நெருங்கி வருவதையும் பார்க்கவில்லையாம். கடல்போன்ற தன் பெருஞ்சேனையையும் நோக்கவில்லையாம். அவனுடைய தேவிமார் அவனைத் தனித்தனியே நோக்கிக்கொண்டிருக்க, அவன் அவர்களில் ஒருவரையும் நோக்காமல், பூமி என்ற ஒரு பெண்ணையே நோக்கியவாறு சென்றான் என்கிறார் கம்பர். அவன் தன் வீரம் குலைந்த காரணத்தால், மானக்கேடு உணர்ந்து நாணம் அடைந்த நிலையில் யாரையும் நோக்காமல், நிலத்தைப் பார்த்தவாறே தலைகுனிந்து சென்றான் என்பதைக் கம்பர் இவ்வாறு உரைக்கிறார்.

கம்பரின் விளக்கங்கள், சிறந்த சொல்லோவியங்களாக ஒளிர்கின்றன. உரையாடல்களும் காட்சிகளை அமைக்கும் திறமும் நாடகச் சுவை நிறைந்தனவாக உள்ளன. உவமைகள் புதுப்புது அழகு வாய்ந்தனவாக அமைந்துள்ளன. திருக்குறள் முதலான பழைய நூல்களின் சொற்களையும் கருத்துகளையும் அவர் கையாளும் போது, அவற்றிற்கு மெருகு ஏற்றி மேலும் விளக்கமுறச் செய்துள்ளார். கம்பருடைய தமிழ்நடை ஒப்பற்ற அழகு உடையது. தமிழ் மொழியின் திறம் முழுதும் புலப்பட அந்த மொழியைக் கையாண்ட புலவர் கம்பர்.

உணர்ச்சிக்கு ஏற்றநடை

கதை மாந்தர்களின் உணர்ச்சிகளுக்கும் பண்புகளுக்கும் ஏற்றவாறு பாட்டுகளின் ஓசைகள் பல்வேறு வகையாக வேறுபடுதலை அவருடைய காவியம் முழுதும் காண்கிறோம். சூர்ப்பணகையின் ஒயிலான நடையையும் கவர்ச்சிதரும் மயக்கத்தையும் விளக்கும் பாட்டு இதோ:-