பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் |
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி |
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும் |
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள். |
இராவணனுடைய மான உணர்ச்சியும் கடுஞ்சினமும்
புலப்படுத்தும் பாடல்களுள் ஒன்று இதோ :
சுட்டது குரங்கெரி சூறை யாடிடக் |
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் |
பட்டனர் பரிபவம் பரந்த தெங்கணும் |
இட்டதிவ் வரியணை இருந்த தென்னுடல். |
இவற்றில் உள்ள உணர்ச்சிகளைச்
சொற்களின் பொருள் உணர்த்துவதற்கு முன்னமே அவற்றின் நடையும் ஓசையும் புலப்படுத்தி
விடுகின்றன. இலக்குமணனின் ஆத்திரமும் கொதிப்பும், குகனுடைய ஆர்வமும் வீரமும், பரதனின்
பக்தியும் பணிவும் முதலியவற்றைக் கம்பர் விளக்குமிடங்களில் தமிழ்ப்பாட்டுகள் சொற்களால்
ஆக்கப்பட்டவைகளாகத் தோன்றவில்லை; உணர்ச்சிகளாலேயே படைக்கப்பட்ட கவிதைகளாகத்
தோன்றுகின்றன.
தமிழ்மொழியின் வளத்தை முழுதுமாகப்
பயன்படுத்தியவர் கம்பர் என்று கூறலாம். தமிழ்ச் சொற்களின் ஓசைவளத்தையும் பொருள்வளத்தையும்
நன்றாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் அவர். வீரம், வெகுளி, அழுகை முதலான பல சுவைகளுக்கும்
ஏற்றவாறு தமிழ்ச்சொற்களின் ஓசையும் பொருளும் இணைந்து ஏவல் செய்வதை அவருடைய பாடல்களில்
கண்டு இன்புறலாம். தாடகையின்மேல் இராமன் எறிந்த அம்பு அரக்கியின் வலிமையை உருவிக்கொண்டு
சென்றதுமட்டும் அல்லாமல், அடுத்து இருந்த மலையையும் மரங்களையும் மண்ணையும் உருவிக்கொண்டு
சென்றது என்கிறார். அந்தப் பாடலில் உரு, உருவி என்ற சொற்களைத் திரும்பத் திரும்பக்
கூறுவதன் வாயிலாக, அம்பு பலவற்றை உருவிக் கொண்டு செல்லும் காட்சியைப் படம் பிடித்துக்
காட்டிவிடுகிறார். நெஞ்சம் நன்கு உணருமாறு செய்துவிடுகிறார்.
அலைஉருவக் கடல்உருவத் தாண்டகைதன் நீண்டுயர்ந்த |
நிலைஉருவப் புயவலிமை நீஉருவ நோக்கையா;. |
உலைஉருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி |
மலைஉருவி மரம்உருவி மண்உருவிற்று ஒருவாளி. |
இராவணன்
போர்களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறும் இடத்திலும் இவ்வாறு ‘அடங்க’
என்ற ஒரு சொல்லைத் திரும்பக் திரும்பக் கூறி, அதன் ஒலியால் இராவணனது வீரம் முதலிய
எல்லாம் அடங்கிய காட்சியை நெஞ்சில் பதியவைக்கிறார்,
|