பக்கம் எண்: - 179 -

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம்அடங்க
   மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க
   மயல்அடங்க ஆற்றல் தேயத்
தம்அடங்கு முனிவரையும் தலைஅடங்க
   நிலைஅடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தனஅம் முறைதுறந்தான்
   உயிர்துறந்த முகங்கள் அம்மா.

பொல்லாத சிங்கம் கோபம் கொண்டு எழுவதுபோன்ற இராவணனுடைய சினம் அடங்கியது; மனம் அடங்கியது; வினையும் அழிந்தது; பகைவர்கள் அழிவதற்குக் காரணமான நீண்ட கைகளின் வீரச் செயல் அடங்கியது; அவனுடைய காம மயக்கம் அடங்கியது; ஆற்றல் தேய்ந்தது; தம் புலன்கள் அடங்கிய முனிவர்களையும் தலைமை அடங்குமாறும் தவநிலைமை அடங்குமாறும் அடக்கிய அந்தக் காலத்தில் இராவணன் முகங்கள் பெற்றிருந்த பொலிவை விட, இன்று அவன் உயிர் துறந்து வீழ்ந்து கிடக்கும்போது அந்த முகங்கள் மூன்றுமடங்கு பொலிவுபெற்றுவிட்டன என்கிறார். அந்த இராவணனுடைய வீரமும் சினமும் செயலும் முதலான எல்லாம் அடங்கிய காட்சியைக் கண்டு கம்பருடைய உள்ளமே உணர்ச்சி வயப்பட்டதனால், இவ்வாறு ஒரு சொல்லே திரும்பத் திரும்ப அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது எனலாம். இராவணன் எல்லோரையும் அடங்கச் செய்தவன்; புலனடங்குதல் பெற்ற முனிவர்களும் தலைமை இழந்து அடங்கச் செய்தவன்; அப்படிப்பட்ட இராவணனுடைய வீரமும் சினமும் செயலும் அடங்கிய தன்மையைத் திரும்பத் திரும்பக் காட்டி, உயிரற்ற அவனுடைய முகங்களில் மட்டும் பொலிவு மிகுந்துவிட்டதாகக் காட்டுகிறார். வீரமும் சினமும் செயலும் எல்லாம் தவறாகப் பயன்பட்டமையின், அவனுடைய முகங்கள் உரிய அளவிற்குப் பொலிவு பெறமுடியாமல் இருந்தன; இப்போது அந்தக் குற்றங்கள் எல்லாம் நீங்கினமையால், மாசு நீங்கிய மணிபோல் மூன்றுமடங்கு பொலிவுற்றன என்கிறார். பாடல் திரும்பத் திரும்பப் படித்துணருமாறு ஓசைச் சிறப்பும் உணர்ச்சிப்பெருக்கும் பொருள் நுட்பமும் பெற்றிருத்தல் காணலாம்.

இவ்வாறு கம்பராமாயணம் ஒவ்வொரு பகுதியும் சொல்நயமும் பொருள்நயமும் கற்பனைவளமும் நிரம்பிச் சுவைமிகுந்த காப்பியமாய்த் திகழ்கிறது.

“இந்த உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் பெற்று அரசாள்வதாக இருந்தாலும், தேவர் உலகத்தில் கற்பகச்சோலையின் நிழலில் இன்புறுவதாக இருந்தாலும், இராமனுடைய கதையில், கம்பர் இயற்றிய இராமாயணக் கவிதைபோல் கற்றவர்களுக்கு இதயம் மகிழ்ச்சியுறாது” என்று கம்பரைப் போற்றிப் பாடிய பழைய பாட்டும் இந்தச் சிறப்பை விளக்குகிறது.