சிறுவர்களால் படித்துப் போற்றப்படுகின்றன;
பெரியவர்களாலும் நினைந்து உணரப்படுகின்றன. ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் தெரியாதவர்கள்
- சில அடிகளாவது மனப்பாடம் இல்லாதவர்கள் - தமிழரில் இல்லை. அடுத்த நிலையில்
வளரும் பள்ளி மாணவர்களுக்காக அவர் இயற்றிய நூல்கள் மூதுரை, நல்வழி ஆகியவை. இவைகள்
எல்லாம் நீதிகளை வற்புறுத்துவன; வாழ்க்கை உண்மைகளை எடுத்துரைப்பன. நீதிகளையும்
உண்மைகளையும் சிறுசிறு சொற்றொடர்களில் ஆழ்ந்த பொருள் உடையனவாகத் தெளிவுபெற
எடுத்துரைப்பதில் இவர் நிகரற்றவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியாரும்
இவருடைய முறையைப் பின்பற்றி, இவர் நூலின் பெயரையே போற்றி, ‘புதிய ஆத்திசூடி’
இயற்றினார் என்றால், இவர் காட்டிய வழி எவ்வளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை
உணரலாம். பலர் அறிந்த நீதி நூல்களாகப் பெரும்பான்மையான மக்களிடம் பரவிச் செல்வாக்குப்
பெற்றவை இவருடைய இந்த நீதிநூல்களே ஆகும்.
அவ்வையார் பாடியனவாகக் கிடைக்கும்
தனிப்பாடல்கள் பல உள்ளன. அவற்றை ஒட்டி வழங்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும் பல உள்ளன.
அவற்றில் எவை வரலாற்றுப்பகுதிகள், எவை புனை கதைகள் என்று வரையறுத்துக் கூற முடியாதவாறு
பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆயினும் எல்லாக் கதைகளும் தனிப்பாடல்களும் சுவை
மிகுந்தனவாக உள்ளன; எல்லாம் சேர்ந்து அவ்வையார்க்குப் பெரும் புகழும் மதிப்பும்
தேடித் தந்திருக்கின்றன. கம்பர் முதலானவர்கள்போல் காப்பியம் இயற்றாமலே பெரும்
புகழ் பெற்றார் இவர்.
கல்வியொழுக்கம், நன்னூற்கோவை,
பந்தனந்தாதி, அருந்தமிழ்மாலை, தரிசனப்பத்து, அசதிக்கோவை ஆகிய நூல்களும் இவரால்
இயற்றப்பட்டவை என்பர். இவை இப்போது கிடைக்காதவை. அசதிக்கோவையின் சில பாட்டுகள்மட்டும்
கிடைக்கின்றன.
ஏழைகளுக்கு உதவிசெய்து வாழவேண்டும்
என்பதை அவ்வையார் எல்லா நூல்களிலும் வற்புறுத்திக் கூறியுள்ளார். செல்வத்தைச் சேர்த்து
மறைத்து வைப்பதை வன்மையாகக் கடிந்து கூறியவர் இவர். கிடைத்தது சிறிதளவாக இருந்தாலும்
மனநிறைவோடு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது இவர் கருத்து. செல்வம்
இல்லாதவர்களும் மானத்தோடு வாழ்க்கை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அரசையும்
மதியாமல் வாழ்ந்த பெரும்புலவர். மக்களோடு தம் வாழ்க்கையை இணைத்துப் பெருமை கொண்ட
புலவர் இவர். ஆகையால் மதியாதவர்களை மதிக்கக்கூடாது என்று இவர் கூறுவது தம் வாழ்க்கை
அனுபவத்தை
|