எடுத்துரைப்பதாக உள்ளது. அன்போடு
உதவாதவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என்கிறார். ஒருவன் வாழ்க்கையில்
உயரவேண்டுமென்றால், சேர்வதற்கு உரிய நல்ல இடம் அறிந்து சேரவேண்டும் என்பது இவருடைய
அறிவுரை. ‘சான்றோர் இனத்து இரு’ என்கிறார். நல்லவர்களைக் காண்பது,
அவர்களின் சொற்களைக் கேட்பது, அவர்களோடு பழகுவது எல்லாம் நன்மை பயக்கும் என்கிறார்.
செல்வ நிலையாமை முதலியவற்றை எடுத்துக் கூறியபோதெல்லாம் இவர் இல்வாழ்க்கையைப்
போற்றத் தயங்கவில்லை. கணவனும் மனைவியும் கருத்து ஒன்றுபட்டவர்களாக, அன்பால் பிணைக்கப்பட்டவர்களாக
வாழ்ந்தால் அதுவே நல்வாழ்க்கை என்கிறார். அப்படிப்பட்ட அன்பும் ஒன்றுபட்ட நெஞ்சமும்
இல்லாமல் கணவனும் மனைவியும் ஏறுமாறாக இருப்பார்களானால் அவர்களின் இல்வாழ்க்கையைவிடத்
துறவே மேலானது என்கிறார். அன்பு இல்லாத பெண்ணிடம் உணவு பெற்று உண்பது கொடுமை என்கிறார்.
அறிவுத்துறை எல்லையற்றது; ஒருவன் வாழ்நாளில் கற்கக்கூடியது மிகச் சிறியதே; கற்றது
கைம்மண் அளவே, கல்லாதது உலகின் அளவு உள்ளது என்கிறார். ஆகையால் கல்விச் செருக்குக்
கூடாது என்கிறார். அறிவின் எல்லையைக் கண்டவர்கள் அமைதியின் உருவாக விளங்குவார்கள்
என்றும் கூறுகிறார். தாய் தந்தையரைத் தெய்வமாகப் போற்றவேண்டும்; தாயிடம் அன்பு
செலுத்துவது கோயில் வழிபாட்டைவிட உயர்ந்தது; தந்தையின் அறிவுரை மந்திரங்களைவிடச்
சிறந்தது என்கிறார். பொதுவாகப் பார்த்தால், இவருடைய நூல்கள் உயர்ந்த நெறியைப்
போற்றி, மக்களுக்கு உரிய முறையில் எளிய நடையில் தெளிவாக எடுத்துரைப்பனவாக உள்ளன.
ஞானக்குறள் என்னும் நூல் ஒன்று அவ்வையார்
பெயரால் வழங்குகிறது. இதுவும் நடை முதலியவற்றால் வேறாக உள்ளது. முன்னைய அவ்வையாரின்
பரந்த உலகியல் அறிவும் எளிய மக்களின் வாழ்வோடு இயைந்த இரக்க உணர்வும் இந்நூலில்
புலப்படவில்லை. உயிரின் தன்மையும் யோக நெறியும்பற்றித் தெளிந்த ஞானியின் அனுபவம்
இந்நூலில் புலப்படுகின்றது. இதைப் பாடிய புலவர் வேறோர் அவ்வையாராக இருக்கலாம்.
விநாயகரகவல் என்ற நூலும் ஓர் அவ்வையாரின் பெயரால் வழங்குகிறது. இது விநாயகர் வழிபாட்டுக்காகச்
சிலர் பயன்படுத்தும் நூல். பக்திச் சுவை கூடியது. இதுவும் அவ்வையார் பெயர் பூண்ட வேறொரு
புலவர் பாடியது எனலாம்.
நிகண்டுகள்,
இலக்கண நூல்கள்
இலக்கியம் பல வளர்ந்த இக்காலத்தில்
வேறு பல துணை நூல்களும் இயற்றப்பட்டன. நிகண்டுகள் சில தோன்றின. அவை ஒரு பொருளுக்கு
|