பக்கம் எண்: - 183 -

உரிய பல பெயர்களையும், ஒரு சொல்லுக்கு உரிய பல பொருள்களையும், மக்கள், விலங்கு, பறவை, மரம், செடி, கொடி முதலான பாகுபாடுகளின்கீழ் உணர்த்துவன. சென்ற நூற்றாண்டுவரையில், பழைய முறையில் கற்றுவந்தவர்களுக்கு அந்த நிகண்டுகள் மிகப் பயன்பட்டு வந்தன. அகர வரிசையில் சொற்கள் கோக்கப்பட்டுப் பொருள் உணர்த்தப்படும் அகராதிகள் ஐரோப்பியர் தொடர்பால் ஏற்பட்டபிறகு, பழைய நிகண்டுகள் அவ்வாறு பயன்படவில்லை. சூடாமணி, திவாகரம், பிங்கலந்தை, கயாதரம் என்பவை முக்கியமான பழைய நிகண்டுகள்.

இக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் பல. அவற்றுள் இன்றும் போற்றிப் படிக்கப்படுவன சில உள்ளன. வீரசோழியம், நம்பியகப்பொருள், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம், வச்சணந்திமாலை, தண்டியலங்காரம், நன்னூல் என்பவை இலக்கண நூல்கள் சிறப்புடையவை. தொல்காப்பியத்திற்கு அடுத்துத் தோன்றிய நூல்கள் பல மறைந்தன. தொல்காப்பியத்தையும் வடமொழி இலக்கண நூல்களையும் பின்பற்றி இலக்கணத்தைக் கூறுவது வீரசோழியம். அதில் கூறப்படும் இலக்கணமுறைகள் சில, வடமொழியிலக்கணத்தைப் பின்பற்றியவை. தொல்காப்பியனார் கூறிய இடைநிலை முதலியவற்றைப் புறக்கணித்து எல்லா வினைச்சொற்களிலும் பகுதி விகுதி கண்டு, விகுதி என்பது காலம் திணை பால் எண் இடம் எல்லாவற்றையும் உணர்த்துவதாகக் காட்டுவது அந்த நூல். அதனை அடுத்துத் தோன்றிய நன்னூல் கூடியவரையில் தொல்காப்பியத்தையே பின்பற்றித் தமிழுக்கு ஏற்ற வகையில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் கூறுவது. எளிமையான முறையில் பாகுபாடு செய்து விளக்குவது; தெளிவாகவும் அமைந்தது. ஆகவே அது பலராலும் இன்றுவரையில் கற்கப்படும் நூலாக விளங்குகிறது. அது செல்வாக்குப் பெற்ற பிறகு வீரசோழியம் பயன்படுதல் குறைந்தது. புறப்பொருள் வெண்பாமாலை வீரம், கொடை ஆகிய புறப்பொருளைப் பாடும் மரபுகளைக் கூறுதல்போல், நம்பியகப்பொருள் காதல் என்னும் அகப்பொருளிலக்கியத்தின் மரபுகளைக் கூறுவது. யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும் செய்யுள் வகைகளையும் அவற்றின் அமைப்பையும் கூறுவன. நேமிநாதம் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம்கூறுவது. வச்சணந்திமாலை அல்லது வெண்பாப் பாட்டியல் என்பது நூலின் முதற்சீர் முதலியவற்றின் பொருத்தங்களும் நூல் வகைகளின் அமைப்புகளும் விளக்குவது. பாட்டியல் என்பது புதிதாகப் புகுந்த இவ்வகை இலக்கண நூல். அதன் முதல் பகுதி, ஒரு நூலின் முதல் சீர் எவ்வாறு அமையவேண்டும் என்று விதிகள் கூறும்போது, நூலின் தலைவனுடைய சாதி நட்சத்திரம் முதலியவற்றைக்கொண்டு முதல் சீர் அவற்றிற்கு ஏற்றவாறு பொருந்தவேண்டும் என்று விளக்குகிறது. நான்கு வருண வேறுபாடுகளுக்கு