பக்கம் எண்: - 188 -

9. சமய நூல்கள்
(கி. பி. 1100 - 1700)

பிறர் ஆட்சியில் இலக்கியம்

சேக்கிழார் கம்பர் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆற்றல் மிகுந்த ஆட்சி இல்லாமல், குழப்பங்கள் மெல்ல மெல்லத் தலையெடுத்தன. சோழரின் பேரரசு வரவரக் குறுகியது. பாண்டியர் மறுபடியும் ஓங்க முடியவில்லை. ஹொய்சளர் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார்கள். பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடநாட்டை ஆண்டு வந்த அல்லாவுதீன் அனுப்பிய படைத்தலைவன் மாலிக்காபூர் தெற்கே இருந்த அரசுகளை வென்று அமைதியைக் குலைத்தான். மதுரையிலும் அவனுடைய படைகள் நுழைந்து குழப்பத்தை உண்டாக்கின. ஐம்பது ஆண்டுக்காலம் பாண்டியநாடு மாலிக்காபூர் ஆட்சியிலும் அவனுக்குப் பின் வந்தவர்களின் ஆட்சியிலும் இருந்தது. ஆந்திராவில் விஜயநகர ஆட்சி ஏற்படும்வரையில் தமிழ்நாட்டில் அமைதி இல்லை. பிறகு தென் இந்தியா முழுவதும் விஜயநகர ஆட்சியின்கீழ் வந்தது. மதுரையில் விஜயநகரத்தாரின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். கலைகளும் இலக்கியமும் ஓரளவிற்கு மீண்டும் வளர்ச்சிபெறத் தொடங்கின. தஞ்சாவூர்ப் பகுதியும் (சோழ நாடும்) நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. அதற்குப் பிறகு அந்தப் பகுதி மராட்டியர் ஆட்சிக்கு மாறியது. கருநாடக நவாபு தமிழ்நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றி ஆளத்தொடங்கினான். போராட்டங்களும் போர்களும் நடந்தன. நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேக்கிழார் கம்பர் போன்ற பெரும்புலவர்களும் பெரிய இலக்கியங்களும் தோன்ற முடியவில்லை. நாயக்க மன்னர்கள் சமய நூல்களுக்கும் சமயக் கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் மதிப்புத் தந்து வளர்த்துவந்த காரணத்தால், அவ்வப்போது சமயச் சான்றோர்கள் தோன்றிச் சிறந்த நூல்கள் எழுதினார்கள்; பழைய சமய நூல்களுக்கு விரிவான விளக்கங்கள் எழுதினார்கள். சமயத்தைக் காக்கும் மடங்கள் தோன்றின; அந்த மடங்களை ஒட்டிப் புலவர் சிலர் சமயமும் தமிழும் வளர்த்துவந்தார்கள். புலவர்கள் தலபுராணங்கள் பாடி அந்தந்த ஊர் மக்களை மகிழ்வித்தார்கள். சிறுசிறு நூல்கள் இயற்றி அங்கங்கே இருந்த செல்வர்களையும் சிற்றரசர்களையும் மகிழ்வித்தார்கள். அந்த நூல்களுள் சில,