பக்கம் எண்: - 187 -

பெரும் புலவர்கள் இவற்றைப் போற்றவில்லை. படித்தவுடன் இவை பொருள் தருவன அல்ல; உள்ளத்தைத் தொடுவனவும் அல்ல; சொற்களைக் கொண்டு விளையாடும் வீண் விளையாட்டாய், பொருள்நயமும் கற்பனைவளமும் இடம்பெற முடியாதனவாய் நின்றமையால் உண்மையான இலக்கியச் செல்வமாக இவற்றை அறிஞர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நூற்றாண்டில் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்னும் புலவரும் கவிஞர் பாரதியாரும் சொல்லணிகளையும் சித்திர கவிகளையும் பழித்தும் ஒதுக்கியும் நல்வழி காட்டியபின், இன்று தமிழிலக்கியத்தில் அவற்றிற்கு இடம் இல்லாமல் போயிற்று.