பக்கம் எண்: - 204 -

புகழேந்தி சோழனால் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், சிறை வழியாக நீர் கொண்டு வரச் செல்லும் பெண்கள் மனம் மகிழும்படியாகச் சில நூல்களை எளிய நடையில் பாடி அவர்களின் உதவியைப் பெற்றார் என்று ஒரு கதை சொல்லும். அவ்வாறு அவர் பாடிய நூல்கள் பவளக்கொடி மாலை, அல்லியரசாணிமாலை, புலந்திரன் தூது, ஏணியேற்றம், பஞ்சபாண்டவர் வனவாசம் முதலியன. இவற்றுள் பெரும்பாலானவை பாரதத்தில் உள்ள கதைகளின் தொடர்பானவை; அல்லது, அவற்றை ஒட்டி நாட்டு மக்களிடையே வழங்கிவந்த கதைகளை விளக்கியவை. பவளக்கொடி மாலை முதலியவை எளிய நடையில் அமைந்தவை; கொச்சைத் தமிழ் கலந்தவை; படித்தவுடன் பொருள் விளங்குபவை. அவற்றை ஒருவர் படிக்க, பலர் கூடிக் கேட்டு மகிழும் வழக்கம் கிராமங்களில் உண்டு. நாட்டுப்பாடல்கள் போலவே கற்பனை வளமும் உள்ளத்தைத் தொடும் சிறப்பும் உடையவை. நளவெண்பாவைப் பாடிய புலவர் வேறு என்பதும், பவளக்கொடி மாலை முதலியவை பிற்காலத்தில் நாட்டுப்பாடல்களின் முறையில் வேறொரு புலவர் இயற்றியிருக்கவேண்டும் என்பதும் அறிஞர் கருத்தாகும். பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்தியின் பெயரைப் பிற்காலத்தார் பயன்படுத்திச் சில எளிய கதைப்பாடல்களை எழுதிப் பரப்பினார்கள் என்பதே உண்மை. புகழ்பெற்ற புலவர் ஒருவரின் பெயரைப் பிற்காலத்தார் பயன்படுத்திக்கொள்வது உண்டு என்பதற்கு அவ்வையார், கபிலர், அகத்தியர், திருவள்ளுவர் முதலானவர்களின் பெயரால் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் சான்றாக உள்ளன. புகழேந்தியின் பெயரால் நிலவும் கதைப்பாடல்கள் பலவும் அப்படிப்பட்டவைகளே.

அதிவீரராமர் முதலானோர்

பாண்டியர் மரபைச் சார்ந்த அதிவீரராம பாண்டியர் பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியிலிருந்து சில பகுதிகளை ஆட்சி புரிந்தார். அவர் தமிழ்ப்புலமை நிரம்பியவர்; அவருடைய ஆட்சி அவருக்குத் தந்த புகழ் சிறியது; அவர் இயற்றிய நூல்களே இன்று அவருடைய பெயரை விளக்கி நிற்கின்றன. அவர் இயற்றிய புராணங்கள் சில. காசிக்காண்டம் 2525 செய்யுளில் காசியின் பெருமையைக் கூறுவது. அவற்றைவிட நைடதம் என்னும் காப்பியமே பலராலும் போற்றப்படுவது. அது நிஷத நாட்டை ஆண்ட நளன் என்னும் அரசனுடைய வாழ்வை விளக்குவது. பாரதத்தில் ஒரு பகுதியாக உள்ள கதையை விருத்தம் என்னும் செய்யுள் வடிவால் கூறுவது. தொடக்கத்தில் கதை விரிவாகக் கூறப்பட்டு வந்து, பிற்பகுதியில் சுருக்கமாக அமைந்து விரைவில் முடிக்கப்படுகிறது. அதிவீரராமருடைய தேவியாகிய அரசி தம் கணவரின் நூலில் அந்தக் குறை இருப்பதைச்