பக்கம் எண்: - 211 -

வருணனைகளாகவோ உள்ளவற்றை அளவு கடந்து புனைந்துரைக்கும் வெறுங் கற்பனைகளாகவோ இல்லை. பிறகு எழுந்த காப்பியங்களில் இந்த நிலை சிறிது மாறியது. உள்ளவற்றை அழுத்தமாக வற்புறுத்திக் கூறுவதற்காக அமையும் உயர்வு நவிற்சிகள்மட்டும் அல்லாமல், வேடிக்கைச்சுவைக்காக அளவுமீறிப் புனைந்துகூறும் வருணனைகளும் இடம்பெற்றன. புராணங்கள் வளர்ந்தபிறகு, பல புராணங்கள் பெருகியபிறகு, புனைந்து கூறுவதில் புலவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டார்கள். கற்பனை என்னும் பறவை மண்ணைவிட்டுப் பறந்ததுமட்டும் அல்லாமல், விண்ணைவிட்டும் பறந்துவிடுவதாயிற்று. வருணனைகள், வாழ்க்கையோடு ஓரளவிற்காகவது தொடர்புபட்டிருக்க வேண்டும் என்ற கொள்கை கைவிடப்பட்டது. அவ்வாறு வரம்பு கடந்து கற்பனை செய்வதும் கவிஞர்களுக்கு உரிய ஒரு மரபு என்று கருதும் நிலைமை வந்தது. குமரகுருபரர் அக்காலத்துப் புலவர்களுள் ஒரு தனிச்சிறப்பு உடையவராக இருந்தபோதிலும், உண்மையான படைப்புத்திறன் வாய்ந்த பெருங்கவிஞராக விளங்கியபோதிலும், அந்தக்காலத்தின் வேகம் அவரையும் விடவில்லை. அளவு கடந்த கற்பனைவருணனைகள் அமைப்பதில் அவருடைய புலமைநெஞ்சமும் ஈடுபட்டது.

அவருடைய வருணனைகளில் மண்ணுலகத்தின் மரங்கள் உயர்ந்து ஓங்கி விண்ணுலகத்தை எட்டி, அங்கு உள்ள கற்பனை மரங்களோடு ஒன்றுபட்டு வளர்ந்து நிற்பதைக் காண்கிறோம். விளையாட்டுப்பெண்கள் சின்ன முச்சிலால் வாரிக் குவித்த மணிகள் பெரிய குவியல்கள் ஆகின்றன; வானத்தை எட்டி உயர்ந்த குவியல்களாய் வழியை அடைக்கின்றன; ஆற்றின் குறுக்கே நின்று அவை அடைப்பதால், ஆற்றின் நீரும் தடைப்பட்டுத் தேங்கி நிற்கின்றது; அந்த நீர்த்தேக்கத்திலும் சூரியனும் சந்திரனும் தோணிகள் ஆகின்றன. மதுரையில் உள்ள சோலைகளின் உயரம் சொல்ல முடியுமா? அவைகளும் வானளாவி உயர்ந்திருக்கின்றன. வண்டுகள் அந்தச் சோலை மலர்களின் மகரந்தப் பொடிகளை உதிர்க்க, அந்தப் பொடிகள் ஆகாய கங்கையைத் தூர்த்து விடுகின்றன. உழவர்கள் கள் குடித்து மயங்கும் மயக்கத்தில் எருமைகளுக்கும் வானத்தில் படரும் கருநிற மேகங்களுக்கும் வேறுபாடு அறியாமல் தடுமாறுகிறார்கள். அந்த மேகங்களையும் தங்கள் எருமைகளோடு சேர்த்துக் கட்டி வேலை வாங்குகிறார்களாம். வயல்களில் விளையும் கரும்புகளின் உயரம் எவ்வளவு? அவைகளும் வானளாவ வளர்கின்றன. இந்திரனுடைய யானையாகிய ஐராவதம் அந்தக் கரும்புகளை விண்ணுலகத்தில் இருந்தபடியே தின்கின்றது. நெல்கதிர்களும் விண்ணுலகத்தினுள் எட்டி உயர்கின்றன. காமதேனு அங்கே அந்தக் கதிர்களைத் தின்று மகிழ்கின்றது. வாளை மீன் இங்கிருந்து துள்ளிப்