பக்கம் எண்: - 212 -

பாய்ந்து சந்திர மண்டலத்தைத் தாக்கி அதன் அமிழ்த தாரைகள் பூமியில் பொழியுமாறு செய்துவிட்டுத் திரும்பிவருகிறது. மற்றொரு வாளைமீன் துள்ளிய துள்ளலில் விண்ணுலகத்தில உள்ள காமதேனுவின் மடியில் முட்டுகிறது. அந்தக் காமதேனு, மடியில் முட்டியது தன் கன்று எனக் கருதிப் பாலை பொழிகிறது. இவ்வாற அவர் எத்தனையோ கற்பனைகளைப் படைத்துள்ளார். அவை சுவையாக உள்ளன என்றாலும், பொழுதுபோக்குக்கு உரிய வேடிக்கையாகவே உள்ளன. பெரும் புலவராகிய அவரை, அந்தக் காலத்துச் சொல்லலங்காரமயக்கமும் விடவில்லை. சிலேடை, மடக்கு முதலிய அலங்காரங்கள் அமைந்த செய்யுள்களும் இயற்றியுள்ளார்.

இவ்வாறு அக்காலத்துப் போக்குகளை அவரிடம் கண்டபோதிலும், உண்மையான கவிஞரின் சிறந்த இயல்புகளையும் அவரிடம் முற்றக் காணலாம். மரஞ் செடி கொடிகளையும் பறவைவிலங்குகளையும் அவற்றின் அழகிய காட்சிகளையும் கண்டு மகிழ்ந்த அவருடைய கலையுள்ளத்தைப் பல பாட்டுகளில் காணலாம். சொற்களைச் சுவைத்து ஆளும் புலவர் என்பதை நயமான சொல்லமைப்பும் ஓசையினிமையும் உடைய பல பாட்டுகளில் உணரலாம்.

நீதிகளைச் சொல்லுமிடத்தில் சுவை குறையாமல் அழகாக எடுத்துரைக்கும் திறன் அவரிடம் இயல்பாக உள்ளது. நிலையாமையைப்பற்றிக் கூறுமிடத்திலும் சுவை குன்றவில்லை. “இளமை, நீரில் தோன்றும் குமிழி போன்றது. நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம். உடம்போ, நீரில் எழுதப்படும் எழுத்துப் போன்றது. ஆகவே, நம்மவர்களே, எம் சிவனுடைய அம்பலத்தை வணங்காமல் இருப்பது ஏன்?”

நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று.

கல்வியைப்பற்றி அவர் எடுத்துக் கூறியுள்ள உயர்ந்த கருத்துகள் பல. கல்வியில் தேர்ந்த புலவர்களிடத்தில் பெருமதிப்பு உடையவர் அவர். “பிரமனுடைய முகத்திலேயே கலைமகள் வாழ்கிறாள். ஆயினும், அவன் புலவர்களுக்கு நிகர் ஆக முடியாது. ஏன் என்றால் பிரமன் படைத்த உடம்புகள் அழிகின்றன. ஆனால் புலவர்கள் படைத்த உடம்புகளாகிய நூல்கள் அழியாமல் வாழ்கின்றன” என்கிறார். கலைமகளின் அருளை வேண்டிப் பாடிய சகலகலாவல்லி மாலையிலும் அவர் கவிஞர்க்கு உரிய பெருமிதத்துடன் பாடியுள்ளார். “மண்ணாளும் வேந்தர்களில் சிறந்தவர்களும் என்பாட்டைக் கேட்ட அளவில் பணியுமாறு செய்ய வேண்டும்” என்று