வேண்டிப் பாடினார். கலைமகளுக்கும்
எவ்வளவு பெருமை தருகிறார்! உலகங்களைக் காக்கும் கடவுளாகிய திருமால் உறங்குகிறானாம்;
உலகங்களை அழிக்கும் தெய்வமாகிய சிவன் பித்துப் பிடித்தவனாகிவிட்டானாம்; ஆனால்
படைக்கும் கடவுளாகிய பிரமன் மகிழ்ந்து சுவைகொள்ளும் கரும்பாகக் கலைமகள் விளங்குகிறாளாம்!
இவ்வாறு எதைப் பாடினாலும் நயமும் சுவையும் விளங்கப் பாடிய பெருங்கவிஞர் குமரகுருபரர்.
சிவப்பிரகாசர்
பதினேழாம் நூற்றாண்டின் தமிழ்ப்புலவர்களுள்
சிறந்து விளங்கியவர் இருவர். ஒருவர் குமரகுருபரர். மற்றவர் சிவப்பிரகாசர். சிவப்பிரகாசரும்,
குமரகுருபரர்போல் துறவியே; வீரசைவம் என்னும் சமயத்தைச் சார்ந்தவர் அவர். துறைமங்கலம்
என்னும் இடத்தில் அமைந்த மடத்தில் வாழ்ந்தவர். வாயின் இதழ் குவியாமல் (ம, ப,
வ ஆகிய எழுத்துக்கள் இல்லாமல்) பாடுவதற்கு உரிய நிரோட்டகம் என்னும வகையில் யமகம்
என்னும் சொல்லணி அமைத்து ‘நிரோட்டக யமக அந்தாதி’ என்னும் நூலை
இளமையில் பாடிப் புகழ் பெற்றார். திருவெங்கை என்ற ஊரில் மடம் அமைத்துத் தங்கியிருந்தபோது,
அந்த ஊர்பற்றி ஒரு கோவையும் கலம்பகமும் பாடினார். தம் ஆசிரியர்மேல் கலம்பகம்,
தாலாட்டு, பிள்ளைத்தமிழ, திருப்பள்ளியெழுச்சி, தூது ஆகிய இலக்கிய வகைகள் இயற்றினார்.
நீதி நூலாக அவர் இயற்றியது நன்னெறி என்பது. திருக்காளத்தி என்னும் தலத்தைப் பற்றிய
புராணம் இயற்றத் தொடங்கி ஒரு பகுதியை எழுதினார் அவருடைய தம்பி கருணைப்பிரகாசர்
என்பவர். அதற்குப் பிறகு சிவப்பிரகாசர் அதைத் தொடர்ந்து இடைப்பகுதியை எழுதினார்.
அதன் பிற்பகுதியை மற்றொரு தம்பி வேலைய சுவாமிகள் எழுதிப் புராணத்தை முடித்தார்.
இவ்வாறு உடன்பிறந்தார் மூவருடைய புலமையும் பெற்று உருவானது திருக்காளத்திப் புராணம்.
சிவப்பிரகாசர் இயற்றிய இருபத்துமூன்று நூல்களுள் புகழ்பெற்று நிற்பவை நால்வர் நான்மணிமாலையும்,
பிரபுலிங்க லீலையும் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆகிய நால்வரைப்பற்றிப் பத்துப் பத்துப் பாடல்கள் கொண்டு நாற்பது பாடல்களால்
அமைந்தது நால்வர் நான்மணிமாலை என்னும் சுவைமிகுந்த நூல். சிவப்பிரகாசர் அந்த நால்வரிடமும்
கொண்ட பேரன்பு அந்த நூலில் புலனாகிறது. பாடல் ஒவ்வொன்றும் கற்பனை நயமும் பொருட்சிறப்பும்
உடையதாய் விளங்குகிறது. பிரபுலிங்கலீலை என்பது வீரசைவ சமயத்தைச் சிறப்பித்து எழுதப்பட்ட
காப்பியம். சிவபெருமானின் அவதாரமாகிய அல்லமப்பிரபு என்பவரைத் தலைவராகக்கொண்டு
அமைந்த அந்தக் காப்பியம், எல்லா நயமும் நிரம்பிக் கற்பவர்க்குச் சுவை மிக்கதாக
|