உள்ளது. உவமையழகும் கற்பனைவளமும்
நிரம்பிய காப்பியமாகத் திகழ்கிறது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் சிவப்பிரகாசரின்
உள்ளம் மிகுதியான ஈடுபாடு கொண்டது. நால்வர் நான்மணிமாலையில் ஒரு பாட்டில் அவர்
கூறுவது வருமாறு; “வேதங்களை ஒதினால், கண்களில் நீர் பெருக்கி நெஞ்சம் நெகிழ்ந்து
உருகி நிற்பவர்களை யாம் கண்டதில்லை. ஆனால் திருவாசகத்தை ஒரு முறையே ஓதினாலும்,
கல்போன்ற மனமும் நெகிழ்ந்து உருக, கண்கள் மணல் கிணறுபோல் சுரந்து நீர்பொழிய,
உடம்பில், உரோமம் சிலிர்ப்பு அடைய, நடுக்கம் உடைந்து பக்தர் ஆகின்றவர்கள் தவிர
வேறு வகையானவர்கள் இந்த உலகில் இல்லை.”
வேதம்
ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம்நெக்கு உருகி நிற்பவர்க்
காண்கிலேம்
திருவா சகம்இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர்
பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு
எய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.
சிவஞான முனிவர்
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவர்
ஈசான தேசிகர் என்னும் சாமிநாத தேசிகர். அவர் இலக்கணக்கொத்து என்னும் நூலை இயற்றியதோடு,
கலம்பகம் முதலான சில இலக்கியங்களும் இயற்றினார். அவருடைய மாணவர் சங்கரநமச்சிவாயர்
நன்னூலுக்கு உரை எழுதினார். மடத்தைச் சார்ந்த பெரும்புலவராகிய சிவஞான முனிவர் (18-ஆம்
நூற்றாண்டில்) அந்த உரையை விரிவாக்கினார். வடமொழி, தமிழ் இரண்டிலும் தேர்ந்த
அவர் தொல்காப்பியத்தின் முதல் சூத்திரத்திற்கு விரிவான ஆராய்ச்சி நூல் எழுதினார்.
அவருடைய காஞ்சிப் புராணம் (காஞ்சிபுரத்தைப் பற்றியது) தலபுராணங்களுள் தனிச் சிறப்போடு
இலக்கிய நயம் மிகுந்து விளங்குகிறது. திருக்குறளின் அடிகளை அமைத்து வெண்பாக்களால்
அவர் இயற்றிய நீதிநூல் சோமேசர் முதுமொழி வெண்பா. அந்நூலில் திருக்குறள் நீதிகளுக்குப்
பொருத்தமான எடுத்துக்காட்டாகக் கதைகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் அமைத்துப்
பாடியுள்ளார். சைவ சித்தாந்த சமயத்திற்கு அடிப்படை நூலாகிய சிவஞானபோதத்துக்கு மாபாடியம்
(மகாபாஷ்யம்) என்ற விரிவுரையும் ஒரு சிற்றுரையும் வேறு சில சமய நூல் விளக்கங்களும்
எழுதியுள்ளார். வடமொழியிலும் தருக்கத்திலும் இலக்கணத்திலும் அவர்
|