பக்கம் எண்: - 215 -

பெற்றிருந்த புலமையை அவருடைய உரைநூல்கள் காட்டும். இலக்கண விளக்கம் என்ற நூலுக்கு இலக்கண விளக்கச் சூறாவளி என்ற மறுப்பு, சிவஞான சித்தியாரின் ஓர் உரையில் ஒரு பகுதிக்கு வைரக்குப்பாயம் என்ற பெயரால் மறுப்பு என்று இவ்வாறு புலவர்கள் அஞ்சத்தக்க வகையில் மறுப்பு நூல்கள் எழுதியவர் அவர். வடமொழி நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவர் இயற்றிய சிறுநூல்களுள் புகழ்பெற்றவை அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் என்னும் இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்களாகும். சில கோயில் தலங்களைப் புகழ்ந்து சிறு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிவஞான சுவாமிகளின் மாணவராகிய கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணம் என்னும் சுவைமிகுந்த தலபுராணத்தை எழுதினார். அது திருத்தணி என்னும் தலத்தைப் புகழ்ந்து முருகக் கடவுளின் பெருமையை விளக்குவது. அவர் காலத்தில் பலர் சீவகசிந்தாமணி என்னும் சைனக் காப்பியத்தைப் படித்து அதன் சுவையைப் பாராட்டித் திரிவதைக் கேட்டு, வேறு சமயநூலைப் போற்றுவதைவிட்டுச் சைவசமயநூலில் ஈடுபட வேண்டும் என்று ஆசைகொண்டு இதை இயற்றினாராம். அதனால் சீவகசிந்தாமணி போலவே, பலவகைச் சுவைகளும் நிரம்பிய இலக்கியமான அதைப் படைத்தார். அவருடைய மாணவர் கந்தப்பையர் பேரூர்ப் புராணம், விநாயக புராணம், பூவாளூர்ப் புராணம், கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடு தூது, திருத்தணிகை ஆற்றுப்படை முதலான பலவகை நூல்களையும் இயற்றினார்.

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் என்பவரும் சிவஞான முனிவரின் மாணவர். திருத்தணித் திருவிருத்தம், துறைசைக் கோவை, கலசைக்கோவை, சிதம்பரேசர் வண்ணம் முதலியன அவர் நூல்கள், அவர்காலத்து மடத்துத் தலைவர்களின்மேலும் நூல்கள் இயற்றினார். அவை திருச்சிற்றம்பல தேசிகர் சிந்து, அம்பலவாண தேசிகர் ஆனந்தக் களிப்பு முதலியன. நாட்டுப் பாடல் வடிவங்களை அவற்றில் கையாண்டார்.

சாந்தலிங்க சுவாமிகள்

பதினெட்டாம் நூற்றாண்டில், சென்னையை அடுத்த திருப்போரூரில் ஒரு மடத்தை ஏற்படுத்திய புலவர் சாந்தலிங்கசுவாமிகள். அவர் வீரசைவ சமயத்தைச் சார்ந்த துறவி. வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார், கொலைமறுத்தல், நெஞ்சுவிடுதூது முதலிய சுவையான சமய நூல்களை இயற்றினார். அவர்க்குப் பின்வந்த சிதம்பர சுவாமிகள் இயற்றிய