கடந்த ஞானநிலை - பெற்றார். பதவியைத் துறந்தார். பல பாடல்கள்
பாடியும் சமாதிநிலையில் இருந்தும் காலம் கழித்தார். அவருடைய பாடல்கள் மிக உயர்ந்த
நிலையில் நின்று பாடப்பட்டவை. சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இருநிலைகளுக்கும்
ஒருவகைச் சமரசம் கண்டவர் அவர். உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும்
மிகத் தெளிவாகத் தமிழில் பாடல்களாகப் பாடியவர் அவர். பக்திச்சுவையான பாடல்களையும்
பாடினார். காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உணர்த்திய பாடல்கள் மிக
அழகாக அமைந்துள்ளன. ‘ஆகாரபுவனம்’, ‘ஆனந்தக் களிப்பு’, ‘பைங்கிளிக்கண்ணி’ என்னும்
பாடல்களில் அதைக் காணலாம்.
அகமேவும் அண்ணனுக்குஏன் அல்லல் எல்லாம் சொல்லச்
சுகமான நீபோய்ச் சுகம்கொடுவா பைங்கிளியே.
எந்த மடலூடும் எழுதா இறைவடிவைச்
சிந்தை மடலாஎழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே.
கண்டதனைக் கண்டு கலக்கம் தவிர்எனவே
விண்ட பெருமானையும்நான் மேவுவனோ பைங்கிளியே.
இவ்வாறு ஐம்பத்தெட்டுக் கண்ணிகள் (இரண்டு அடிப் பாடல்கள்)
கொண்டது பைங்கிளிக்கண்ணி. ஆனந்தக் களிப்பு என்னும் பகுதி காதல்துறையில் தோழியை
விளித்துக்கூறும் பாடல் ஆகும்.
சங்கர சங்கர சம்பு - சிவ
சங்கர சங்கர சம்பு
என்ற இசைமெட்டோடு பிச்சையெடுக்கும் பண்டாரங்கள் தெருவில்
பாடும் நாட்டுப்பாடல் வகை அது. அந்த இசையமைப்பில் உயர்ந்த கருத்துகளை அழகாகப்
பாடியிருக்கிறார்.
உள்ளதும்இல்லதுமாய்முன் - உற்ற
உணர்வதுவாய் உன் உளம்கண்டது எல்லாம்
தள்எனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்
தான்ஆக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி.
இவ்வாறே மிக நுட்பமான உண்மைகளை எல்லாம் எளிய இரண்டு அடிப்
பாடல்கள் பலவற்றில் தெளிவாக விளங்குமாறு அமைத்துள்ளார். பராபரக்கண்ணி என்ற பகுதி
அப்படிப்பட்டது. அது 389 கண்ணிகள் உடையது.
எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.
|