பக்கம் எண்: - 217 -

பாடல்களிலிருந்து கண்டெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். மாலையில் சிறுவர் சிறுமியர்க்குத் திருட்டிதோடம் கழித்துக் காப்பிடும் பாட்டாக ‘அந்திக்காப்பு’ பாடியுள்ளார். பகடி, பந்தடித்தல், குறத்தி தன்னை அறிமுகம் செய்துகொளல், குறி சொல்லுதல் முதலிய பலவகைப் பாடல்களும் நாட்டுப் பாடல்களை ஒட்டி அமைந்தவை. குணலை, பறை, இம்பில், காளம் முதலிய இசைக் கருவிகளைக்கொண்டு ஒலிப்பவர்களைப் பின்பற்றி அமைந்த பாடல்களும் உள்ளன. பாம்பாட்டியின் பாடலும், குரவையாடும் பாடலும் உள்ளன. கோழியையும் கிளியையும் விளித்துப் பாடும் பாடல்களும் பாடியுள்ளார். ஆண்டாளின் பாடலைப் பின்பற்றி, ‘கனாக் கண்டேன் தோழி நான்’ என்ற வகையிலும் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள பல்லிப்பாட்டு இனிய வகையில் அமைந்துள்ளது.

                ஓடும்மனம் நம்மினுடன் உறவுசெயுமாகில்
                உள்ளநிலை மெல்ல உணர்வு ஆகிவரு மாகில்
                நாடும்இடம் எங்கும்அறிவு ஆகிவிடு மாகில்
                நல்லகுரல் நல்லதிசை சொல்லுசிறு பல்லி.

பல்லியைப் பார்த்து நல்லது சொல், நல்ல திசையில் ஒலி என்று பாடும் பாட்டில் இவ்வளவு உயர்ந்த கருத்தை அமைத்து இனியபாடலாக ஆக்கித் தந்திருப்பது வியப்பானது.

தாண்டவராயர்

அத்வைதக் கொள்கையை அழகான 310 விருத்தப் பாக்களால் விளக்கும் நூல் கைவல்ய நவநீதம் என்னும் நூல். தத்துவ விளக்கமாக உள்ள நூல் இவ்வளவு சுவையாக அமைய முடியுமா என்று படிப்பவர் வியந்து போற்றும்படியாக இயற்றியுள்ளார் தாண்டவராய சுவாமிகள் என்னும் சான்றோர். பாடல்கள் எளியநடையில் அமைந்து இனிய ஓசை உடையனவாக உள்ளன. நூலின் பெயர்க்குப் பொருள் ‘ஆன்மாவின் தனித்தன்மையை விளக்கும் வெண்ணெய்’ என்பது. உபநிடதங்களும் சங்கரர் தரும் விளக்கங்களுமாகிய பாற்கடலைக் கடைந்தெடுத்த வெண்ணெய் என்று கூறப்படுவதற்கு ஏற்றவகையில், சமய உண்மையை மிகச் சுருங்கிய முறையில் சுவையாக எடுத்துரைக்கும் நூல் இது.

தாயுமானவர்

தாயுமானவர் (1705 - 1742) வடமொழி தமிழ் ஆகிய இருமொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த ஞானி. திருச்சிராப்பள்ளியில் அக்காலத்தில் ஆட்சி நடத்திவந்த விஜயரங்க சொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தவர். அந்தப் பதவியைப் பொருட்படுத்தாத மனநிலை - உலகியல்