பக்கம் எண்: - 230 -

பெருமாள் போற்றித் திருப்பஞ்சகம், இலக்குமி தோத்திரம் ஆகியவற்றை அவருடைய அருட்பாவில் காணலாம்.

ஆனந்தக்களிப்பு என்னும் நாட்டுப்பாடல் முறையில் அமைந்த பாடலும் வெண்ணிலாப் பாட்டும் பலரும் போற்றுபவை. பழைய மரபாக வந்துள்ள உலாப்பற்றித் ‘திருவுலாப் பேறு’, ‘திருவுலா வியப்பு’, ‘திருவுலாத் திறம்’, ‘திருக்கோலச் சிறப்பு’ பாடியுள்ளார். சிவபெருமான் தெருக்களில் உலா வரும்போது கண்டு காதல் கொண்ட காதலியாகக் கற்பனை செய்து பாடிய பாடல்கள் அவை. நாரையையும் கிளியையும் இறைவனிடம் தூது அனுப்பும் முறையிலும் பாடல்கள் பாடியுள்ளார். பழைய காதல் துறைகள் பல அமைந்த பக்திப் பாடல்கள் நூற்றுக்கணக்கில் அருட்பாவில் உள்ளன. சைவ சமயச் சான்றோரிடத்தில் இராமலிங்க சுவாமிகள் பெருமதிப்பு உடையவர். அவர்களின் பாடல்களையும் புகழ்ந்து - சிறப்பாகத் திருவாசகத்தின் பக்திப் பெருமையைப் புகழ்ந்து - போற்றியுள்ளார். தேவார திருவாசகத் தொடர்புகளையும் திருக்குறள் கருத்துகளையும் தம் பாடல்களில் போற்றிக் கலந்துள்ளார். மாணிக்கவாசகரைப் பின்பற்றி ‘உந்தீ பற’ என்று முடியும் ‘திருவுந்தியார்’ பாடியுள்ளார். ‘அடைக்கலமே’ என்று முடியும் பத்துப்பாடல் பாடியிருக்கிறார். நாட்டுப்பாடல்களின் வழியை ஒட்டி அவர் பாடிய ‘ஆனந்த மேலீடு’ என்பது பெண்களின் பந்தாட்டப் பாடல் ஆகும். மற்றோர் ‘ஆனந்த மேலீடு’ என்பது ஊதூது சங்கு என்று சங்கு முழங்கும் பாட்டு ஆகும். சின்னம்பிடி, முரசுப்பாட்டு முதலியனவும் ஒலிக்கும் கருவிகளை எட்டிய பிற பாட்டுகளும் உள்ளன.

எளிய சொற்களுக்கு இடையே மிக நுட்பமான தத்துவ அனுபவங்கள் பொதிந்த ஆழ்ந்த பாடல்களும் உண்டு.

            ஆணிப்பொன் அம்பலத்தே கண்ட காட்சிகள்
           அற்புதக் காட்சியடி அம்மா
           அற்புதக் காட்சியடி
என்ற பல்லவி உடைய ‘காட்சிக்கண்ணி’ என்ற பாடல் அப்படிப்பட்டது.
            வானத்தின்மீது மயிலாடக் கண்டேன்
           மயில் குயில் ஆச்சுதடி - அக்கச்சி
           மயில் குயில் ஆச்சுதடி
           சாதி சமயச் சழக்கைவிட் டேன் அருட்
           சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
           சோதியைக் கண்டேனடி.
என்னும் பாடலும் அத்தகையதே ஆகும்.