தயங்கினார்; பிறகு நூலின் ஆசிரியர் ஒரு நாள் இசையுடன் பாடியபோது
உருக்கமான அந்த இசைப் பாடல்களைக் கேட்டு மனம் மாறிச் சிறப்புப்பாயிரம் தந்தாராம்.
சபாபதி
முதலியார் முதலானவர்கள்
அஷ்டாவதானம் சபாபதி முதலியார் பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பலவகைச் செய்யுள் நூல்கள் இயற்றிய பெரும் புலவர்களுள் ஒருவர். சந்தப் பாடல்களை
மிக விரைவாகப் பாடுவதில் வல்லவராக இருந்தார். தலபுராணம், கலம்பகம், குறவஞ்சி,
அந்தாதி, சதகம் முதலிய பலவகை நூல்களை இயற்றினார். முப்பத்துமூன்று நூல்களை இயற்றிய
அவர், அக்காலத்தில் பலரைப் புலமை உடையவராக்கி வளர்த்திருக்கிறார். அவருடைய நூல்கள்
இப்போது கற்பவர் இல்லாமற் போயின.
செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களுமாகப் பல நூல்கள் எழுதிய
புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவர் (1832 - 1889). அவர் இராமலிங்க சுவாமிகளின்
மாணவராய் அவருடன் பல ஆண்டுகள் இருந்தவர். சுவாமிகளின் திருஅருட்பாவின் பெருமையைப்
பரப்பியவர். வடமொழியிலும் வல்லவர். ஆகையால் பராசர ஸ்மிருதியை உரைநடையில் மொழிபெயர்த்தார்.
பெரிய புராணத்தை உரைநடையில் எழுதினார். மார்க்கண்டேய புராணத்தையும் உரைநடைப்படுத்தினார்.
வேறு சில வாழ்க்கை வரலாறுகளும் எழுதினார். செய்யுள் நூல்களாக இருபத்துநான்கு இயற்றினார்.
பூண்டி அரங்கநாத முதலியார் (1837 - 1893) பல துறைகளில்
கற்றுத் தேர்ந்த அறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசியராகத் தொழில்
புரிந்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவராக விளங்கினார். கச்சிக் கலம்பகம்
என்ற பெயரால் பழைய தமிழ்நூல் ஒன்று இருந்தது. அது மறைந்தது. அரங்கநாதர் முதலியார்
பாடிய கச்சிக்கலம்பகமே இப்போது உள்ளது. அது சுவை மிகுந்த நூல்.
தண்டபாணி சுவாமிகள் அல்லது முருகதாச சுவாமிகள் (1839
- 1898) என்பவர் துறவி. அருணகிரிநாதர் போல் சந்தப் பாடல்கள் பல பாடிப் திருப்புகழ்ச்
சாமியார் என்ற பெயரும் பெற்றார். முருகன்மேல் அந்தாதி, கலம்பகம், சதகம் முதலியனவும்
பாடினார். அருணகிரிநாதர் வரலாற்றைப் புராணமாகப் பாடினார். அவர் இயற்றிய புலவர்
புராணம் பல புலவர்களின் வரலாற்றைப் பற்றியது; கற்பனையான கதைகளையும் அவர்களின்
வரலாற்றில் சேர்த்துள்ளார்.
சரவணப்பெருமாள் கவிராயர் இராமநாதபுர அரசரின் அவைக்களத்தில்
விளங்கிப் பணவிடுதூது, அசுவமேதயாக புராணம் முதலியன தந்தார்.
|