பக்கம் எண்: - 237 -

பெருக்கெடுத்து ஓடும் தமிழ்நாட்டின் காட்சியே காப்பியத்தில் உள்ளது. தமிழ்நாட்டு மலைகளில் வாழும் குறவர் குறத்தியர், பரண்கள், தினைப்புனம், யாழ், பறை, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், ஒலியோடு வீழும் அருவிகள் எல்லாவற்றையும் அரபு நாட்டில் காண்கிறோம். நகரப்படலத்தில் மெக்கா நகரம் வருணிக்கப்படுகிறது. மெக்கா நகரம் மதுரை போலவே காட்சியளிக்கிறது. மெக்கா நகரக் கடைத்தெருக்களில் சந்தனம், அகில், தந்தம் முதலிய தமிழ்நாட்டுப் பொருள்களே மலிந்துள்ளன. இவ்வாறு சீறாப் புராணத்தில் புலவரின் தமிழ்நாட்டுப் பற்று விளங்குவதோடு, பழைய தமிழ் நூல்களில் தோய்ந்த தமிழுள்ளமும் விளங்குகிறது. உவமைகளும் உருவகங்களும் அழகுற அமைந்துள்ளன. பாடல்கள் இனிய ஓசை உடையனவாய்க் கற்பவர் நெஞ்சில் இனிக்கின்றன. அரபு மொழிச் சொற்கள் பல கலந்துள்ளமையால், இஸ்லாமியச் சமயப் பழக்கம் இல்லாதவர்களுக்குச் சிறிது தயக்கம் ஏற்படுவது உண்டு. இலங்கையில் உள்ள தமிழ் முஸ்லிம்கள் இந்நூலைத் தம் சமய வாழ்வுக்கு மிக முக்கியமான நூலாகக் கொண்டுபோற்றிப் படித்துவருகிறார்கள்.

உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் கடவுள் வாழ்த்தாகப் பாடி அமைத்த முதல் பாட்டு, ஆழ்ந்த கருத்தும் பொதுவான நோக்கும் உடையது.

            திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
                தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
           மருவினும் மருவாய் அணுவினுக்கு  அணுவாய்
                மதித்திடாப் பேரொளி அனைத்தும்
           பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
                பூதலத் துறைந்தபல் உயிரின்
           கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த
                கருத்தனைப் பொருந்துதல் கருத்தே.

மஸ்தான் பாடல்கள்

குணங்குடி மஸ்தான் (1788 - 1835) எனப் புகழ்பெற்றவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். அவர் துறவறம் பூண்டார். அவருடைய பாடல்கள் இஸ்லாமியக் கருத்துகளைக் கொண்டவை ஆயினும், சமரச நோக்கம் உடையவை. பல பாடல்கள் தாயுமானவரின் பாடல்களைப் போலவே செய்யுள் அமைப்பும் தத்துவக் கொள்கையும் உடையவை. முஸ்லிம் அல்லாதவர்களும் அந்தப் பாடல்களை விரும்பிப் படிப்பது உண்டு. அவரைப் போற்றித் துதித்துச் சில நூல்கள் எழுதப்பட்டன. ஐயாசாமி முதலியார் ‘குணங்குடி நாதர் பதிற்றுப்பத்தந்தாதி’ என நூறு பாடலும்,