எருசலேத்தில் ஒட்டகமும் பேரீச்சமரமும் காணப்பட வேண்டுமே;
அவை இந்தக் காப்பியத்தின் வருணனையில் இல்லை. காப்பியத்தில் உள்ள நாடும் நகரமும்
வெளிநாட்டுப் பகுதிகளாகத் தோன்றவில்லை; தமிழ்நாடும் தமிழர் நகரமுமாகவே காட்சியளிக்கின்றன.
தமிழில் இயற்றப்பட்ட இந்தக் காப்பியம் தமிழர் படித்துப் போற்றுவதற்கு உரியது.
ஆகையால், அவர்கள் விரும்பும் இயற்கைக் காட்சிகளே வருணிக்கப்பட்டுள்ளன எனலாம்.
ஜோஸப் முதலானவர்களுக்குப் பெயர் வழங்கும் முறையிலும் அவர் தமிழர் விரும்பும் பெயர்களாக
அமைத்து வழங்குவதும் காணலாம். ஜோஸப் வளன் ஆகிறார். ஜான் கருணையன் ஆகிறார்; ஐசக்
நகுலன் ஆகிறார். ஒருவன் சிவன் எனப்படுகிறார். தமிழர் விரும்பும் திருக்குறள் தொடர்களையும்
கம்பராமாயணத் தொடர்களையும் தம் காப்பியத்தில் பல இடங்களில் அமைத்துள்ளார்.
தேம்பாவணியில் துறவறம் புகழ்ந்து கூறப்படுகிறது. சூசையப்பர்
மேரியம்மை ஆகியோரின் இல்லறம் புகழப்படுகிறது. ஆனால் தமிழ்க் காப்பியங்களில்
மிகுதியாகக் கூறப்படும் காதல் வருணனைகள் இந்நூலில் விரிவாக இல்லை. தம் துறவு மனப்பான்மைக்கும்
பக்தியுள்ளத்திற்கும் ஒத்துவராமையால், வீரமாமுனிவர் அவற்றைக் குறைத்துவிட்டார்.
இரேனியஸ் (C.T.E. Rhenius 1790 - 1838) என்பவர்
ஜெர்மனி நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவ மிஷனரியார். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சமயத்
தொண்டு செய்த அவர், தமிழில் பேச வல்லவராக விளங்கியதுபோலவே எழுத வல்லவராகவும்
இருந்தார். சில செய்யுளும் இயற்றினார். சமய நூல்களுடன் இரண்டொரு பொதுநூல்களையும்
இயற்றினார்.
கால்டுவெல்
சென்ற நூற்றாண்டில் சமயத் தொண்டு செய்ய வந்தவராகிய
கால்டுவெல் (1814 - 1891) என்னும் ஆங்கில நாட்டுப் பாதிரியாரின் உள்ளத்தையும்
தமிழ்மொழி கவர்ந்தது. அவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு குடகு ஆகிய திருந்திய
திராவிடமொழிகளையும் வேறு பல திருந்தாத திராவிட மொழிகளையும் ஆராய்ந்து ஒப்பிடுவதில்
பல ஆண்டுகள் செலவிட்டார். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்று ஆங்கிலத்தில்
அவர் எழுதிய நூல் திராவிடமொழிகளுக்குச் சிறப்பைத் தேடித் தந்தது. தமிழ் முதலான
மொழிகளின் இலக்கண அமைப்பை ஒப்பிட்டு, அந்த மொழிகளின் அடிப்படை ஒரே வகையானது
என்பதைத் தெளிவுபடுத்தினார். அந்த மொழிகளின் அடிச்சொற்கள் (roots) பல
|