பக்கம் எண்: - 243 -

ஒத்திருப்பதை அவர் எடுத்துக்காட்டினார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத்தொண்டு புரிந்தபோது, தமிழை நன்கு பேசவும் எழுதவும் கற்றார். தமிழ் மக்களைப்பற்றித் தமிழில் சில நூல்கள் எழுதினார். தமிழ் உரைநடையில் அவர் இயற்றிய நூல்கள் ‘ஞானக்கோயில்’, ‘நற்குணத் தியானமாலை’ முதலியன.

போப்

ஜி. யு. போப் (1820 - 1907) என்னும் ஆங்கிலேய அறிஞரும் சென்ற நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கற்றுத் தமிழ்த் தொண்டு செய்தவர். அவர் முதன்முதலாக மேல்நாட்டு அறிவுத்துறைகளாகிய உளநூல், தத்துவநூல், கணிதம், அளவை நூல் (logic) முதலியவற்றைத் தமிழில் கற்பித்தவர். தமிழின் இலக்கணத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய மூன்று பழந்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பாமாலையிலும் புறநானூற்றிலும் உள்ள பாட்டுகள் பலவற்றை ஆங்கிலப்படுத்தினார். வேறு சில தனிப்பாடல்களையும் மொழிபெயர்த்தார். அவருக்கு இருந்த தமிழ்ப்பற்று, பாராட்டுவதற்கு உரியதாகும். தம் கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்க வேண்டும் என்று விரும்பியவர் அவர்.

வேதநாயகம் பிள்ளை

வேதநாயகம் பிள்ளை (1826 - 1889) மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று, அவருடன் நெருங்கிப் பழகினார். மாவட்ட நீதிமன்றத்தில் முனிசீப் என்ற பதவியில் பணிபுரிந்தவர். இசைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பயிற்சி நிரம்பியவர். நீதிமன்றச் சட்டங்களை முதல் முதலில் தமிழில் எழுதினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நெருங்கிப் பழகிப் பேரன்புகொண்டவராக இருந்த போதிலும், இலக்கியம் படைத்துத் தருவதில் அவருடைய வழியைப் பின்பற்றவில்லை. பதினாறு தலபுராணங்களையும் பதினாறு அந்தாதிகளையும் பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களையும் அப்படிப்பட்ட வேறுபல செய்யுள்நூல்களையும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றினார். வேதநாயகம் பிள்ளை தமிழ் வளர்ச்சிக்காக அந்த வழியைப் பின்பற்றவில்லை. ஒரு தலபுராணமோ ஒரு பிள்ளைத்தமிழோ கலம்பகமோ பாடவில்லை. திருவருளந்தாதி, தேவமாதா அந்தாதி என்ற இருநூல்கள் அந்தாதியாகப் பாடினார். அவைகளும் பழைய முறையில் யமகம் திரிபு முதலான சொல்லணிகளுக்குச் சிறப்புத் தராமல் எளிய நேரிய முறையில் அமைந்தன. அவரது பெண்மதி மாலை, மகளிர்க்குப் பயன்தரும் படைப்பு ஆகும். சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சத்தியவேதக் கீர்த்தனை என்ற இசைப்