| ‘நினைவின் நிழல்’ என்பது செ. குணசேகரர் படைத்த
சிறு கதைகளின் தொகுப்பு. மலேசியத் தமிழர் வாழ்வின் சில பகுதிகள் அவற்றில் சொல்லோவியம்
ஆக்கப்பட்டுள்ளன. ‘அன்பு அன்னை’ என்பது மு. துரைசாமியின் சிறுகதைத் தொகுப்பு. அதன்
நடை சுவையானது.
மலேசிய எழுத்தாளர்களின் கவிதைத் திரட்டு சில வெளியாகியுள்ளன.
சுவாமி ராமதாசரின் ‘உரிமை முழக்கம்’ உணர்ச்சி வாய்ந்தது. மறைமுடி வல்லத்தரசு, தாம்
வாழும் நாட்டைப் போற்றி அதன் எழிலையும் வளத்தையும் பாராட்டி, ‘இன்ப மலேசியா’
இயற்றியுள்ளார். இரா. பெருமாள் தந்த ‘போர் முழக்கம்’, ‘மலேசியா பேரொலி’ ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. கவிதைகள் பழைய யாப்பு முறையிலும் உள்ளன; புதிய எளிய வடிவங்களிலும்
உள்ளன. உலகநாதன் ‘சந்தணக் கிண்ணம்’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.
அதில் உள்ள கவிதைகளில் புதுமையுணர்ச்சியையும் தமிழார்வத்தையும் காணலாம்; நடையின்
இனிய ஓட்டத்தையும் உள்ளத்தைத் தொடும் உருக்கத்தையும் காணலாம். ‘குப்பைத் தொட்டி’
என்ற தலைப்புள்ள கவிதையில் விதவை ஒருத்தியின் துயர் உணர்ச்சியுடன் கூறப்படுகிறது.
“முறையோடு பெற்றிருந்தால் தொட்டில், கட்டில்; முறை தவறிப் பெற்றதனால் குப்பைத்
தொட்டி” என்ற அடிகள் சமுதாயத்திற்குக் கொடுக்கப்படும் சவுக்கடியாக உள்ளன. ‘கேட்பதும்
கிடைப்பதும்’ என்ற செய்யுளின் வடிவம் புதிது; பொருள் உணர்த்தும் முறையும் புதிது.
‘அன்பு இதயம்’ என்பது மலேசியச் சிறுகதைகளின் நல்ல
தொகுப்பு. துரை, குமார், இராமையா, அன்பானந்தன், சாப்பசான், வீரப்பன், நாகுமணாளன்,
நெடுமாறன், கிருஷ்ணசாமி, வேலுசாமி, கமலநாதன், இளம்வழுதி, வடிவேல், திருவேங்கடம்,
மகேசுவரி ஆகிய புதிய எழுத்தாளர் பலருடைய சிறுகதைகள் அதில் உள்ளன. அவர்களுள் பெரும்பாலோர்
ரப்பர்த் தோட்டங்களை அடுத்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள். மலேசியப் பிரச்சினைகளை
மையமாகக் கொண்டு அவர்கள் தங்கள் அனுபவத்தைக் குழைத்துக் கதைகள் எழுதியிருப்பது
பாராட்டத்தக்கது. ‘குரங்கு ஆண்டுப் பலன்’ என்ற கதையில் சீனர்களின் நம்பிக்கைகளும்
பழக்கவழக்கங்களும் இடம் பெறுகின்றன. மற்றக் கதைகளில் மலாய் மொழித் தொடர்களும்
வருகின்றன. கதைககளில் பல, நல்ல கலை வடிவமும் பெற்றிருக்கின்றன. ‘கழுவாய்’ என்ற
ஒரு கதையில் ஒருவன் குடும்ப வாழ்க்கையை அன்பாக நடத்தி அமைதி பெற அறியாத காமுகனாக
இருக்கிறான்; பல பெண்களை
|